ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?

மக்களின் எழுச்சி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை என்றுமில்லாதவாறு பாதித்துள்ளது மட்டுமின்றி, அவரை முன்னரை விட பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்யவும் தூண்டியுள்ளது.

சிங்கள பெளத்த உயர்பீடம் மற்றும் சிங்கள மக்களிடையே “திறமையான ஒரு வேலைகாரன்” என்னும் பெயர் எடுத்த கோத்தபாய மீது 1,000 குற்றச்சாட்டுகள் இருப்பினும், கோத்தபாய இல்லாமல் மகிந்த ராஜபக்ச இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும்.

2019 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள சிறந்த ஒரு வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தில் இல்லாமல் மொட்டுக் கட்சி கடும் சவால்களை எதிர்கொண்டிருந்தது. மக்களின் நம்பிக்கைக்கு உகந்த எவரும் ராஜபக்ச குடும்பதில் இருந்திருக்கவில்லை. நாமலுக்கோ வயது மற்றும் அரசியல் அனுபவம் குறைவு, பசிலுக்கு அமெரிக்க குடியுரிமை பிரச்சனை போன்ற காரணங்களினால்தான் முழுமனமின்றி கோத்தபாயவை தேர்தலில் இறக்கினார் மகிந்த ராஜபக்ச.

பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து எவரது தலையீடுமின்றியே எல்லாவற்றையும் செய்து பழகிய கோத்தபாய ராஜபக்சவிற்கு, அரசியல் சுத்த சூனியம் என்பது யாவரும் அறிந்ததே. அப்படியான ஒரு சூழ்நிலையில், கோத்தபாய ஜனாதிபதியாக இருப்பினும் இலங்கையை முழுமையாக நிர்வகித்து, பசில் ராஜபக்சவின் உதவியுடன் அரசியல் கட்டமைப்புகளை வரையறை செய்தது எல்லாமே மகிந்த ராஜபக்சதான்.

மகிந்த அணியினர் நடத்திய கூத்துக்களை கண்டும் காணாமல் இருப்பதுதான் ஜனாதிபதியின் முக்கிய வேலையாக இருந்தது. அதுவே அவருக்கு இப்ப ஆப்பாகவும் வந்துள்ளது. 2020 கொரோனா பரவலால் நிலைமை மோசமடைய, நாட்டின் நிதிக் கையிருப்பும் குறைந்துகொண்டே சென்றது. அதனால் நாடு அதழ பாதாளத்தில் வீழ்ந்து இன்று மக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர்.

சகோதரர்கள் செய்த பிழைக்கு தான் மட்டும் பலியாகும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. தன்னை பகடக்காயாக உபயோகித்து, மகிந்த மீண்டும் ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்ற கோத்தபாய அனுமதிக்கப்போவதில்லை என்பது, அவரின் அண்மைக்கால நகர்வுகள் புலப்படுத்துகின்றன.

பிரதமர் உட்பட அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசு ஒன்றை அமைக்க கோத்தபாய ஆயத்தமாகியுள்ளார். மைத்திரி, டலஸ் அழகப் பெரும, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற ‘சிங்கள அரசியல்’ அனுபவமிக்கவர்களின் அறிவுரையோடு இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி தயார் ஆகின்றார் போலுள்ளது.

சஜித் தலைமையிலான எதிரணி மற்றும் மகிந்த, பசிலை உள்ளடக்கிய பொதுஜன பெரமுனவின் அணி என்பவற்றின் ஆதரவு இல்லாவிடினும், ஆட்சியை அமைக்க பொதுஜன பெரமுனவின் பின்வரிசை மற்றும் இளம் உறுப்பினர்களது ஆதரவை ஜனாதிபதி பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

எனவே இன்று(29/04) காலை கூடவுள்ள கூட்டணிக் கட்சிகள் மற்றும் தனித்துச் செயற்படும் அணியினருடனான கூட்டத்தில், மேற்படி முடிவை ஜனாதிபதி அறிவிக்கும் சாத்தியம் உள்ளது.

சர்வாதிகாரத்தன்மையுடனேயே எல்லாவற்றையும் செய்து பழகிய கோத்தபாயவிற்கு, அரசியலிலும் சர்வாதிகாரத்தைக் காண்பிப்பாரா??? அதுவும் சொந்த சகோதர்களுக்கு எதிராக. பொறுத்திருந்து பார்போம்.

Latest articles

Similar articles