இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், கோத்தபாய ராஜபக்சவை சிங்கள மக்கள் ஒன்றுபட்ட மனதுடன் செயற்பட்டு அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர்.
பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு / ஆணை கோத்தபாய ராஜபக்சவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள், இலங்கையின் சரிவை நோக்கிய பொருளாதாரம் என்பன மக்களை கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டியுள்ளது.
காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை போன்ற தென்இலங்கை மாவட்டங்களில் கோத்தபாய ராஜபக்ச இலகுவாக வெல்வார் என்று தெரிந்திருந்தபோதிலும், மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது சற்று யோசிக்க வேண்டிய விடயம்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளாக விளங்கிய கொழும்பு, கண்டி, மலையக (நுவரெலியா மாவட்டம் தவிர) மாவட்டங்களில்கூட கோத்தபாயவிற்கு மிகச் சிறப்பான வெற்றி.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் என சிறுபான்மையின மக்கள் மட்டுமின்றி, கண்டி – காலி என பேதமின்றி பெரும்பான்மையின சிங்கள மக்களும் “ஒற்றுமையே பலம்” என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
பெரும்பான்மை, சிறுபான்மை என இருசார் மக்களும் தனித்தனியே “ஒற்றுமையே பலம்” என செயற்படும்போது, சிறுபான்மை இன மக்களின் ஒற்றுமைத்தன்மை பலனற்றுப்போகின்றது. இது ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.
தமிழில் “மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”, “ஒற்றுமையே உயர்வு”, “ஒற்றுமையே பலம்” என அருமையான பொன்மொழிகளுண்டு. துரதிஷ்டவசமாக தமிழர்களுக்கு அல்லது சிறுபான்மையினருக்கு அந்த அருமையான பொன் மொழிகளில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எந்தவிதத்திலும் பயனற்று போயுள்ளது என்பதே நிதர்சனமாகும்.