ராஜபக்ச குடும்பத்தின் அதிகார மோகத்தால் பொருளாதாரரீதியில் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையை, புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மீட்க, ராஜபக்சவினரின் ஆசியுடன் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க திட்டம் தீட்டியுள்ளாரா என ஐயமேற்படுகிறது.
கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் வரும் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் (04/02/2023) இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இனவாத கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெறுவதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. இம்மாதம் கிடைத்திருக்க வேண்டிய கடனுதவி, வரும் 2023 ஜனவரி அல்லது பெப்ரவரியிலேயே கிடைக்கும் சாத்தியமுள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பல வேண்டுகோள்களை சிங்கள பேரினவாதிகள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் மயப்படுத்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றை கடுமையாக எதிர்க்கும் சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள், அப்பாவி சிங்கள மக்களையும் தூண்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதேவேளை புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் முதலீடு செய்ய தயாராக உள்ள போதிலும், திடமான அரசியில் தீர்வை ரணில் அரசாங்கம் முன்வைக்கும் வரையில் அவர்களும் முதலீடு செய்ய தயாராக இல்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியும் தள்ளிப்போவதால், புலம்பெயர் தமிழரின் நிதியை எப்படியேனும் விரைவாக நாட்டிற்குள் கொண்டுவர ஜனாதிபதியும் தயாராகிவிட்டார். அதற்கான முதல் முயற்சிதான் தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கிய கோரிக்கைகளான காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள், படையினரால் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கல் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற முக்கிய விடயங்களுக்கு ஜனாதிபதி அதி முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டணியும் பயணிக்க ஆரம்பித்து விட்டது. எனவே இந்தியாவின் விருப்பமும் இதுவே என்பது உறுதியாகியுள்ளது.
போர் இல்லாத இலங்கையில் தற்போது பெரும் “நிதி” தொடர்பான பிரச்சனையே முக்கியமாக இடம்பெற்று வருவதால், தேவையான ஒரளவு நிதியையேனும் புலம்பெயர் தமிழரிடம் இருந்து இலங்கைக்கு கொண்டுவரும் ரணிலின் முயற்சிக்கு, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தப் போவதில்லை.
ஆனால் தமிழர்களின் அடிப்படை உரிமை பிரச்சனையை காட்டி, தமிழர்களிடமே நிதியைப் பெற்று, நாட்டை சீர் செய்த பின்னர், சிங்கள பேரினவாத வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
2002இல் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பித்தவர் ரணில். ரணில் ஆரம்பித்த சமாதான பேச்சுவார்த்தையையே சிங்கள மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் என பூதாகரமாக்கி, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற கசப்பான அனுவங்களை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். சிங்களவர்களும் மறக்க மாட்டார்கள்.
மீண்டும் 2022இல் ரணில் தமிழர்களுக்கு விரைவான தீர்வு எனும் முயற்சியில் இறங்குகின்றார். திறைசேரி வெறுமையாக உள்ளதால், எல்லாவற்றிற்கும் தலையாட்டும் ஒரு போக்கை மகிந்த உட்பட பல கடும்போக்கு சிங்கள அரசியல் தலைவர்கள் காண்பிப்பார்கள். ஆனால் பின்புலத்தில் வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு எதிராக சிங்கள மக்களை திசை திருப்பி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி, இலங்கையை நரகத்தில் வீழ்த்துவார்கள் என்பது நூறு சதவீதம் திண்ணம்.
எனவே புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்களும் பாத்திரமறிந்து பிச்சையிட தெரிந்துகொள்ளவது சாலச் சிறந்ததாகும்.