பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க முப்படையினரின் உதவியை நாடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால், அமைதி நிலையை உருவாக்கும் பொறுப்பை முப்படையினரிடம் ஒப்படைத்துள்ளார் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
இதுவரையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது வெளிக்காட்டப்படாத எதிர்ப்பு படையினரிடமிருந்து நேற்று(13/07) வெளிப்பட்டது. படையினரின் எதிர் தாக்குதலால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், 75 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிக புத்திசாலித்தனமாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரணில் ஆரம்பித்துவிட்டார் என்பது தெளிவாகின்றது. இராணுவ வீரரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்றும், 60 துப்பாக்கி குண்டுகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளியான செய்தி மிகவும் பாரதூரமானதொன்றாகும்.
ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்க இவ்வாறான வதந்திகளைப் பரப்பி, மக்கள் போராட்டத்தை முழுமையாக மழுங்கடிக்க ரணில் முயற்சி செய்கின்றார் போலும். ரணிலுக்கு ஆதரவாக கோத்தபாய ராஜபக்சவின் விசேட இராணுவ அணி செயற்பட வாய்ப்புள்ளது. இராணுவத்தளபதி, பாதுகாப்புச் செயலாளர் உட்பட பெரும்பாலான உயர் இராணுவ அதிகாரிகள் கோத்தபாயவின் விசுவாசிகளாவர்.
அரசியல் யாப்பின்படி, பிரதமராக இருந்த ரணில் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் 69 இலட்சம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக ஆட்சிபுரிந்த கோத்தபாய ராஜபக்சவையே மக்கள் முழுமையாக நிராகரிக்கும்போது, அரசியல் யாப்பு கதையெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதுதான் தற்போதைய யதார்த்தம்.
73 வயதாகும் ரணிலுக்கு 45 வருட அரசியல் அனுபவமுள்ளது. ரணிலின் கனவே ஒரு முறையேனும் ஜனாதிபதியாக இருந்துவிட வேண்டும் என்பதுதான். இவ்வளவு அரசியல் அனுபவமிருந்தும், மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ரணில் தொடர்ந்தும் அடம் பிடிப்பாரேயானால், 2022ல் இன்னொரு கறுப்பு ஜூலை ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது.