ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?

புதிய பிரதமர் ஒரு வார காலத்தினுள் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தார்.

மேற்குறித்த விசேட உரை ஒளிபரப்பாக முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜனாதிபதிக்குமிடையே அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, ஜனாதிபதி நேரடியாகவே ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் பதவியை ஏற்கும்படி வேண்டுகோள் விடுத்ததாகவும், அதனை ரணில் பின்வரும் நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவருகிறது.
🟢 அரசியலமைப்பில் 19A
🟢 பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையீடு செய்யாமல் இருத்தல்

ஜனாதிபதியை பதவி விலகக்கோரி “GoHomeGota” என மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்போது, ஜனாதிபதியே பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை முன்மொழிந்திருப்பாராயின் அதனை மக்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியே.

ஏனெனில் பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் பெரும்பான்மையைப் பெற முடியாது. பொதுஜன பெரமுன எனும் நாமத்தை சிங்கள மக்கள் வாழ்நாளில் இனி ஒருபோதும் உச்சரிக்க மாட்டார்கள். அந்தளவிற்கு அந்தக் கட்சியிலும், கட்சி உறுப்பினர்களிலும் கடும் கோபத்தில் உள்ளனர்.

ரணிலின் தெரிவிற்கு, ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காவிட்டால், அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்திற்குள் எவ்வித எதிர்ப்புகளும் இருக்காது.

ஆனால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லாமல் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி உட்பட 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தவறியுள்ளனர் என்பதே உண்மை.

இப்படியான ஒரு சூழலில், வரும் நாட்களிலும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதற்கான சாத்தியங்களே அதிகமுள்ளன. அந்த மக்கள் எதிர்ப்பை எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பதில்தான் இலங்கையின் எதிர்காலம் உள்ளது.

Latest articles

Similar articles