மகிந்தவின் அடுத்த நகர்வு

“இடைக்கால அரசு அமைந்தாலும் நான்தான் பிரதமர்” என மகிந்த ராஜபக்ச திடமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டு நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது. ஒரு சதவீத மக்களேனும் ‘ராஜபக்ச’ அணிக்கு ஆதரவாக இல்லை.

இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற, கிடைக்கப்பெறவுள்ள தற்காலிக நிதி உதவியினை மட்டும் வைத்துக்கொண்டு, இலங்கையர்களை மூடர்களாக்கி, தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய மகிந்த திட்டம் தீட்டுகிறார்.

இன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப, குடும்ப அரசியலை விடுத்து, ஒரு ‘முழுமையான அரசியல்வாதியாக’ செயற்படத் தொடங்கியுள்ளார் மகிந்த ராஜபக்ச. நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும், தனது கெளரவத்தை காப்பாற்றும் முயற்சியிலும் மகிந்த ராஜபக்ச முழுவீச்சில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் தனது சகோதர்களைக்கூட பிரியத் தயாராக உள்ளார்.

சர்வதேச மட்டத்தில், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடியும்வரை இந்தியாவின் அனுசரணையைப் பக்கவாட்டில் பெற்றுக்கொண்டு, தற்போது பேச்சுவார்த்தை ஓரளவிற்கு முடிவடைந்துள்ளதால், சீனாவுடனான தொடர்பை அதிகப்படுத்தியுள்ளார் மகிந்த.

மேற்குறித்த நாடுகளிடம் இயன்றளவு இலங்கையை அடகு வைத்தேனும், தன்னையும், தனது பதவியையும் காப்பாற்ற முயற்சிக்கின்ற மகிந்த அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார் என்பதையே அவரது அண்மைய பேச்சு வெளிப்படுத்துகின்றது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மக்களின் எதிர்ப்பும், அரசாங்கத்தினால் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவது கடினம் என்பதாலும், ஒற்றுமையற்ற பலவீனமான எதிர்க்கட்சி போன்றன இலங்கையை ஒரு அரசியல் மற்றும் பொருளாதார சிக்கலில் சிக்கவைத்துள்ளது.

இப்படியான ஒரு சிக்கலில் மகிந்த தான் நினைத்ததை அடைய வேண்டுமாயின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அடக்குவதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறானதொரு நகர்விற்கு மகிந்த முற்பட்டால், அது இலங்கையை இரத்த வெள்ளத்தில் மூழ்க வைக்கும்.

மக்களின் ஆணையைப் பெற்று, ராஜா மாதிரி வாழ்ந்த, 40 வருடகால அனுபவம் மிக்க ஒரு அரசியல்வாதி, ஒருபோதும் அவப்பெயருடன் ஆட்சியை விட்டு விலகமாட்டார். இயன்றளவு தன்னை நிலைநிறுத்த ஏதேனும் ஒரு வகையில் முயற்சி செய்து கொண்டே இருப்பார். அந்த வகையில்தான் ரணிலின் ஆசீர்வாதத்துடன், இந்தியா மற்றும் சீனாவின் உதவியுடனும் சில அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ என்னும் ஐயம் எழுகின்றது.


Latest articles

Similar articles