விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!

இலங்கை அரசியல் வரலாற்றில் அதி உச்ச சிக்கல் அல்லது அரசியல் நெருக்கடி தற்போதுதான் ஏற்பட்டுள்ளது எனலாம். எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் எனும் ஒரு நிலையே தோன்றியுள்ளது.

சிங்களவரின் மத்தியில் சிங்கம் மாதிரி வலம் வந்த மகிந்த, இன்று அதே மக்களுக்குப் பயந்து குகைக்குள் ஒளிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் வந்த ரணில் இன்று பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

சர்வதேச நாடுகளுடன் மிக நெருக்கமான இராஜ தந்திர உறவுகளைப் பேணிவரும் ரணில், பொருளாதார சிக்கல்களை ஓரளவு சரி செய்வார் என்பது உறுதி. இருப்பினும் உலக நடப்புகள் மற்றும் மக்களின் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் போன்றன சில தடங்கல்களை ஏற்படுத்தலாம்.

அந்த வகையில், நாட்டு நிலைமையை மேலும் மோசமாக்காமல் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தானாகப் பதவி விலக வாய்ப்புள்ளது.(இதற்குரிய அனைத்து ஒழுங்குகளையும் ரணில் ஏற்படுத்திக் கொடுப்பார்)

வெற்றிடமாகும் ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை உருவாகும்போது, ரணிலின் அரசியல் சாணக்கியத்தின் மூலம் சஜித் பிரேமதாசா பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

நாட்டில், சுதந்திரக் கட்சி ஒரு பலமிழந்த ஒரு கட்சியாகவே உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியையும் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் மிகவும் மோசமாக பலமிழக்கச் செய்துள்ளார். பொதுஜன பெரமுன எனும் கட்சியை மக்கள் இனிமேல் விரும்ப மாட்டார்கள். ஆகவே அந்த கட்சி உறுபினர்கள் சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலோதான் இணைய வேண்டும்.

ஆகவே தன்னால் பலமிழந்த ஐக்கிய தேசியக் கட்சியை, தன் கட்சியில் இருந்து பிரிந்து போன சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி மீண்டும் தன் பக்கம் இழுப்பதன் மூலம், ஒரு பலமான கட்சியாக மீண்டும் உருவாக்கும் ரணிலின் அரசியல் தந்திரமும், தற்போது அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள ஒரு முக்கிய காரணம் ஆகும்.

– அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை –

Latest articles

Similar articles