இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் மாஃபியாக்கள் அட்டகாசம் புரிந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் 20பேருக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டவர்களும், இறந்தவர்களும் போதைப்பொருள் கடத்தல் அல்லது வியாபாராம் தொடர்பான நபர்களே.

கடந்த 29ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் T-56 ரக துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அரச ஆதரவு இல்லாமல், இராணுவத்தினர் உபயோகிக்கும் T-56 ரக துப்பாக்கியைப் பாவித்து, பட்டப்பகலில் கொலைகள் இடம்பெற வாய்ப்பே இல்லை. அத்துடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றபோது பதிவாகிய CCTV காணொளிகள் கிடைக்கப்பெற்றும், இதுவரையில் எவருமே கைது செய்யப்படவில்லை என்பதுதான் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ஆட்சிக் காலத்தில் காதும் காதும் வைத்தாற்போல் நடைபெற்றுவந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் இடம்பெற்ற காட்டிக் கொடுப்புகளுக்கான பழிவாங்கல் நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருவதாக உள்ளூர் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மகிந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டு ஒரு சில நாட்களில் ஆரம்பமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஜனாதிபதியோ, பிரதமரோ எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

நாட்டில் தோன்றியுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் தொடர்பான கொலைகள் இடம்பெற்றுவருவது மட்டுமல்லாமல், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைப் பராமரிக்கும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600பேர் வரையில் தப்பியோடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை மிகவும் பாரதூரமான மற்றும் ஆபத்தான நிகழ்வாகும்.

கந்தகாடு சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட ஒரு சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இங்கிருந்து தப்பிய 500பேருக்கு மேற்பட்டோரில், 250பேரை மீண்டும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்தோரை அல்லது புனர்வாழ்வு நிலையத்தில் இருப்போரை கலவரங்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தும் வேலைகளை மகிந்த அரசு கடந்த காலங்களின் மேற்கொண்டிருந்தமையையும் நாம் இந்நேரத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.

தனது அரசியல் வாழ்வில் பாரிய தோல்வியைக் கண்டுள்ள மகிந்த ராஜபக்ச மற்றும் சகோதரர்கள், மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மறக்கவே மாட்டார்கள். அசையா சொத்துக்கள் அனைத்தும் இழந்துள்ள ராஜபக்ச சகோதரர்கள், பதிலுக்கு சிங்கள் மக்களை பழி வேண்டுவார்களோ என்ற அச்சமும் ஒரு பக்கம் இல்லாமலில்லை.

Latest articles

Similar articles