படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்

படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலியா பிரதமர் அன்ரனி அல்பனீஸி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மிகத் தெளிவானது என குறிப்பிட்ட ஆஸ்திரேலியா பிரதமர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டவிரோதமாக படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி, படகு மூலம் வருபவர்களுக்கு புகலிடம் அளிப்பதாக ஆட்கடத்தல்காரர்களினால் பொய்யான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றது.

கடத்தல்காரர்களின் பொய்யான தகவல்களை நம்பி, பலர் சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே பல படகுகளை இலங்கை கடற்படையினர் வழி மறித்துள்ளதுடன், பலரைக் கைது செய்தும் உள்ளனர்.

மேலும் சில படகுகள் ஆஸ்திரேலிய கடற்பரப்பினை அண்மித்தபோது, எல்லைப் பாதுகாப்பு படையினரால் வழிமறிக்கப்பட்டு, படகில் வந்த அனைவரும் விமானம் மூலம் இலங்கைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் ஆட்கடத்தல்காரர்கள் அல்லது மக்களை இந்த ஆபத்தான பொறிக்குள் சிக்கவைக்கும் தரகர்கள் போன்றோரை இலங்கை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை மேற்கொள்ள, பல இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையரின் கையில் கொடுத்து அப்பாவி மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

Latest articles

Similar articles