சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டைவிட்டு செல்ல முயன்ற 91 பேர் கைது

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் டிரோலர் படகொன்றின் மூலமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு செல்ல முயன்ற 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதே நோக்கத்திற்காக மாரவில விடுதி ஒன்றில் தங்கியிருந்த 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று(07/06) கடற்படையினரின் வழமையான ரோந்து நடவடிக்கையின்போது சிலாபம் கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான டிரோலர் மீன்பிடி படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டபோது, அதில் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக செல்லும் 76 பேர் இருந்துள்ளனர். படகிலிருந்த அனைவரையும் கைது செய்த கடற்படையினர், கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 76 பேரில், 64 ஆண்கள், 05 பெண்கள், 07 குழந்தைகள் உள்ளடங்குகின்றனர். இதில் ஆறுபேர் மேற்படி சட்டவிரோத கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மாரவில விடுதி ஒன்றிலிருந்து 15 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களும் சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல தங்கியிருந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மாரவில, நீர்கொழும்பு, சிலாபம் மற்றும் கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மிகவும் ஆபத்து நிறைந்த படகு மூலமான சட்டவிரோதமான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என பல தரப்பினரும் வேண்டுகோள்களை விடுத்தவண்ணமுள்ளனர்.

இருப்பினும், மக்களும் தொடர்ச்சியாக சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ள முயற்சிப்பதும், பின்னர் அவர்களை கடற்படையினர் கைது செய்வதும் தொடர்கதையாகி வருகின்றது.

படம் : இலங்கை கடற்படை

28/05/2022 அன்று பிரசுரமான செய்தி

Latest articles

Similar articles