கொரோனாவும், கோத்தாவும்

இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் பரவல் வேகமடைந்துள்ளது. வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் கோத்தபாய அரசு படுதோல்வி கண்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிமார் என பலர், பலவகையான இன்னல்களுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுடன் போராடி வருகிறார்கள். ஆனால் அரசாங்கமோ இன்னொரு வழியில் பயணிக்கிறது.

SriLanka fails covid

நாட்டில் பாடசாலைகள் பூட்டு, மாணவர்களின் கல்வி பாழ்பட்டுள்ளது. மக்களோ தாம் நினைத்தபடி, சுகாதாரா விதிமுறைகளை பின்பற்றாது, முரட்டுத்தனமான துணிவுடன் விழாக்கள், நிகழ்வுகள், ஆலய வழிபாடுகள் என சிறிய சிறிய அளவில் ஒன்றுகூடி வருகிறார்கள். உள்ளூர் பிரதேசங்களில் அரசாங்க சுகாதாரத் துறை அதிகாரிகளும் தம்மால் இயன்றதை செய்கின்றபோதும், பொதுமக்களை 100% கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகவே உள்ளது (நடைமுறையில் சாத்தியமற்றதொன்றாகும்).

எனவே கொரொனா வைரசின் பரவல் அதிகரிதுள்ளதுடன், அது தன் உருவை மாற்றி பல பிறழ்வுகளாக உருவெடுத்துள்ளது. இதுவரை மூன்று வகையா பிறழ்வுகளாக வைரஸ் மாற்றமடைந்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைரசின் பரவலைக் கட்டுப்படுத் தவறின், வைரசின் பிறழ்வுத் தன்மை அதிகரித்து, வீரியம் கொண்ட வைரசாக மாறும். வைரஸ் வீரியமடையும்போது தொற்றின் வேகம் அதிகரிப்பதுடன், மனிதர்களைத் தாக்கும் திறனும் அதிகரிக்கும்.

வைரஸ் புதிய பிறழ்வுகளாக உருவெடுக்கும்போது, ஏற்கனவே மக்கள் தடுப்பூசி எடுத்திருப்பினும் அது பலனற்றதாகவே மாறிவிடும் அல்லது வினைத்திறன் குறைந்ததாகவிடும். இதன் காரணமாகத்தான் வைத்திய நிபுணர்கள் துறை நாட்டை முழுமையாக முடக்கும்படி பல தடவை அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இருப்பினும் அரசு கண்டுகொள்ளவில்லை.

அரசியல்

நாட்டை முடக்குவது ஏதோ எதிர்க்கட்சியின் சதி என எண்ணி, பிடிவாதமாக செயற்பட்டு வருகிறது இலங்கை அரசு. எவ்வித பலனையும் தராத இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தி நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது. “ஆந்தைகளுக்கும், வெளவால்களுக்குமே அரசு இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது” என பிரபல சிங்கள பிக்கு ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களோ தமது கடமைக்கு தாம் நினைத்தபடி, எவ்வித விஞ்ஞான அறிவுமின்றி, கொரோனா பற்றி பல தகவல்களை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களோ அருகிலுள்ள இடங்களுக்கே செல்ல முடியாமல் இருக்கும் நிலையில், பாடசாலகள் மூடப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச அரசின் நெருங்கிய சகாவான உதயங்க வீரதுங்க, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றோர் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக செய்திகளை வெளியிட்டுகொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள், பெளத்த பிக்குகள் நாட்டை முற்றாக முடக்கும்படி பல அழுத்தங்களைக் கொடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. கண்துடைப்பிற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதிரடியாக முக்கிய அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தினார். குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சராக செயற்பட்ட, இலங்கையின் ஒரே ஒரு பெண் அமைச்சரான பவித்திரா வன்னியாராச்சியின் பதவியை பறித்து, கெஹலிய ரம்புக்வெலவிற்கு வழங்கினார். இருப்பினும் பிரதமரின் அழுத்தத்தால் பவித்திராவிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சை வழங்கினார்.

நாட்டின் நிலமை மோசமடைந்து செல்ல, இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத்தில் ரணிலை சந்திக்க ஜனாதிபதி ஆர்வம் காட்டாத போதும், இறுதியில் சந்திப்பிற்கு சம்மதித்திருந்தார். பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் மக்களுக்கு பகிரங்கப்படுத்த்தப்படவில்லை.

இறுதியாக, சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 61 பில்லியன் ரூபாய் கடன் பெறும் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை சீர் செய்யவும், பொருளாதாரத்தை கட்டமைக்கவுமே இந்த கடன் பெறப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் இலங்கை வங்கரோத்து நிலமைக்கு சென்றுள்ளது. ரூபாயின் பெறுமதி என்றுமில்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடனால் கொரோனாவை கட்டுப்படுத முடியாது என்பதை கோத்தபாய அரசாங்கம் உணரவேண்டும். இப்படியே நாடு செல்லுமாயின், இலங்கையகள் செத்து மடிய, சில காலங்களின் பின்னர் வேற்று நாட்டவர்கள் வந்து இலங்கையில் குடியேறும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Latest articles

Similar articles