ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது

இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் 52,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சட்டமா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளதாக இலங்கை காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சஹ்ரான் கும்பல் மொத்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பலின் ஒரு சிறு பகுதியே எனத் தெரிவித்துள்ளதுடன், இதுவரை 723பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 311பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம்

நல்லாட்சி அரசின் ஆட்சியில் இடம்பெற்ற இந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக அப்போதைய ஆட்சியாளர்கள் விசாரணையை மேற்கொண்ட விதம், மைத்திரி-ரணிலின் நாடகம் அதன் பின்னர் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் போன்ற நிகழ்வுகள் வெளிப்படையாகவே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன.

ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் போன்றே தோற்றமளித்தது. சந்தேகப்பட்ட மாதிரியே ஆட்சி மாற்றமும் இடம்பெற்றதுடன், விரும்பியதைச் செய்யக் கூடிய வகையில் பயங்கரவாத தடைச் சட்டமும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டது.

முஸ்லிம்களின் நிலை

தற்போது காவல்துறை மா அதிபரின் கருத்தை உற்று நோக்கும்போது, “சஹ்ரான் கும்பல் மொத்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பலின் ஒரு சிறு பகுதியே” எனத் தெரிவித்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நாடகம் தொடரப் போவதாகவே ஐயப்பட வேண்டியுள்ளது. இது அப்பாவி இஸ்லாமிய மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தையும் அவர்கள் மனதில் ஏற்படுத்தும். (ஏற்கனவே பல வசதி வாய்ந்த முஸ்லிம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.)

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய சகோதரர்களில் பலர் நிச்சயமாக அப்பாவிகளாகவே இருப்பார்கள். ஒன்றிரண்டு சுயநல இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செயற்பாட்டாலும், சிங்கள பேரினவாத அரசின் கபடத்தனத்தாலும் அப்பாவி இஸ்லாமிய மக்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இது 1983 தொடக்கம் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இடம்பெற்ற அல்லது இடம்பெற்று வருகின்ற நிலைக்கு ஒப்பானதாகும். அதாவது எந்த நேரத்திலும் யாரும் கைது செய்யப்படலாம், வியாபார ஸ்தாபனங்களை வலோத்காரமாக கையகப்படுத்தலாம் போன்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசு ஆட்சி செய்த காலத்தில் இடம்பெற்ற இந்த தொடர் குண்டுத் தாக்குதல்களால் 260இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.

மகிந்தவின் நெருங்கிய சகாவும், அதிகமாக அரசியல் பேசும் மதபோதகரான கத்திரினல் மல்கம் ரஞ்சித் கடந்த இரண்டு வருடங்களாக தமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒரு நிலையிலேயே உள்ளார். வத்திக்கான் தலையிடும், கத்தோலிக்கர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையும் கொரோனா பரவலால் இல்லாமல் போயுள்ளது.

தற்போதைய ஆட்சியாளர்களின் பலமும், இலங்கை மீதான மேற்குலக நாடுகளின் குறைந்தளவு செல்வாக்கும், இந்தியாவின் பலவீனமும், அலட்சியமும் இலங்கையில் பல ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் போன்ற நாடகங்களை அரங்கேற்ற உதவப் போகின்றது என்பது மட்டும் திண்ணம்.

Latest articles

Similar articles