யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) மெத்தனமாக இருக்கும்போது, மற்றைய கட்சிகள், சுயேட்சை அணிகள் கடுமையாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை வைத்து பல காலமாக பழைய அரசியலை செய்து வரும் கட்சிகளுக்கு இம்முறை தேசிய மக்கள் கட்சி, சுயேட்சைக் குழுக்கள்(குறிப்பாக வைத்தியர் அர்ச்சுனா) என பல சவால்கள் களத்தில் காத்திருக்கின்றன.
பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அநுரவின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மீதான வடக்கு மக்களின் ஆதரவை கடுமையாக விமர்சித்திருந்தார். வட பகுதியில் ஓரளவு கட்டுக்கோப்புடன் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையே திசைகாட்டியின் மக்கள் ஆதரவு சற்று அசைத்துப் பார்த்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்பதுடன், தமது வாக்குகள் உடையப் போவதை அவர் திறம்படக் கணித்து விட்டார் என்றே தோன்றுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கு ஒப்பான ஒரு எழுச்சியை, வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சை குழு 17 உம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது. தொடர்ச்சியான முகநூல் நேரடி காணொளிகள் மற்றும் பதிவுகள் மூலம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் அர்ச்சுனா. பல உள்ளூர் YouTube தள இளைஞர்களும் அர்ச்சுனாவின் பிரச்சார பணிகளுக்கு பக்கபலமாக உள்ளனர். அர்ச்சுனாவும் இயன்றளவிற்கு அனைத்து உள்ளூர் YouTube தளங்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார். இவ்வாறானதொரு மக்களுடனான நெருங்கிய ஈடுபாட்டை எந்தவொரு அரசியல் கட்சிகளும் இதுவரை காட்டியதில்லை.
இந்த நிலையில் அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் (மான் சின்னம்) வேட்பாளர் மிதிலைச் செல்வியுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தினை அர்ச்சுனா முகநூல் காணொளியில் நேரடியாக ஒளிபரப்பியிருந்தார். அந்த நிகழ்வு தொடர்பாக அர்ச்சுனாவை பலர் கண்டித்திருந்த போதும், பலர் மிதிலைச் செல்வியையும் கண்டித்திருந்தனர். (இந்த நிகழ்வு தற்செயலான நிகழ்வா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட நிகழ்வா என உறுதிபடத் தெரியவில்லை)
“பெண்” என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, அர்ச்சுனா ஒரு பெண்ணை அவமதித்து விட்டார் என்ற கோணத்திலும் ஊடக சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் சொல்வதைப் போல “பெண்” என்ற கருத்தை எடுத்தால், ஒரு பிரச்சனை இடம்பெறும் இடத்தில் ஏன் அந்த பெண்மணி அவ்வளவு நேரம் இருந்த்தார்?, “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல, அந்த பெண்மணியும் விலகியிருக்க வேண்டுமல்லவா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
மிதிலைச் செல்வி தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை உறுப்பினராக இருந்தவர். கொழும்பில் தமிழரசுக் கட்சி போட்டி போடுவதாக தெரிவித்து, கடைசி நேரத்தில் தவிர்த்திருந்தது. இதனால் விசனமடைந்த மிதிலைச் செல்வி யாழில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் அணி தயார்படுத்தப்பட்டதால், மிதிலைச் செல்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்தும், சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. எனவே இவர் உடனடியாகவே விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் (மான் சின்னம்) ஐக்கியமானார். இவர் தாய்க் கட்சிக்கு உண்மையாக இருந்திருந்தால், தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் தவராசா அணியில் அல்லவா இடம்பெற்றிருக்க வேண்டும்??
மேலும், ஏற்கனவே அபலைப் பெண்ணிற்கு மதுபான நிலைய அனுமதிப் பத்திரம் (பார் லைசென்ஸ்) கொடுத்த விக்னேஷ்வரன் போன்று, மிதிலைச் செல்வியும் ஒரு கொழும்பு வரவு. கடந்த தேர்தல் போன்று இம்முறை தமக்கு வாக்குகள் கிடைக்கப் பெறாது என்பது மான் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். இதனால் கொழும்பு ஸ்ரைலில் “பெண்ணியம்” பேசி வாக்குகள் சேர்க்க முடிந்தளவு முயற்ச்சி செய்கிறார்கள் போலுள்ளது.
மணிவண்ணன் மற்றும் பார்த்திபன் போன்றவர்களின் துரதிஷ்டமோ என்னவோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து, இப்போ மானிடம் மாட்டி தமது வெற்றியை தாமே கேள்விக்குறியாக்கியுள்ளனர். இவர்கள் சுயேட்சையாகக் போட்டியிட்டிருந்தால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கலாம்.
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றன தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மட்டுமே கருத்துக் கூறி வாக்குச் சேர்ப்பார்கள். ஆனால் மான் கட்சியினர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகவும், அர்ச்சுனாவிற்கு எதிராகவும் கருத்துக் கூறி வாக்கு சேர்க்கப் பார்ப்பார்கள். இங்கே சிக்கல் என்னவெனில் தேசிய மக்கள் சக்தி சிங்கள தேசிய கட்சி என்றரீதியில் மக்கள் தவிர்த்தாலும், அர்ச்சுனாவை அவ்வாறு தவிர்க்க மாட்டார்கள். எனவே அர்ச்சுனாவிற்கெதிராக இவர்கள் எது செய்ய முற்பட்டாலும் அது அவர்களையே திருப்பத் தாக்கும் சந்தர்ப்பம் அதிகம் உண்டு என்பதை மான் கட்சியினர் புரிந்துகொண்டால் சரி.