இலங்கையின் புதிய அமைச்சரவை நேற்று (18/11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய அமைச்சுக்கள் இன்னும் ஜனாதிபதி வசமே உள்ளன.
இரண்டு பெண்கள் உட்பட 21 அமைச்சர்களைக் கொண்டதாக புதிய அமைசரவை காணப்படுகிறது. கடந்தகால அரசாங்களில் அமைச்சரவையில் 50 வரையிலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நிதி விரயம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சனத்தொகைப்படி, 25 வரையிலான அமைச்சர்களை நியமிக்க முடியும் என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
புதிய அமைச்சரவையில் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகிய இரு தமிழர்கள் அமைச்சர்களாக உள்ளனர். முஸ்லிம் உறுப்பினர் எவரும் அமைச்சரவையில் உள்வாங்கப்படவில்லை.
மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை (05 ஆசனங்கள்) தேசிய மக்கள் சக்திக்கு வடபகுதியில் பெற்றுதந்த எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மட்டுமே இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் ஆகும். இந்த மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர், மீள்குடியேற்றம், புணர்வாழ்வு என பல முக்கிய விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. மேற்படி விடயங்கள்/பிரச்சனைகள் சிங்களப் பிரதேசங்களில் இல்லை. இதனை தேசிய மக்கள் சக்தி கருத்தில் எடுக்கவில்லைப் போல் தோன்றுகின்றது.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்துக்களுக்கான அமைச்சும் இந்த புதிய அமைச்சரவையில் இல்லை. இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் அழிவடைந்துள்ளன. சில வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து ஆலய பிரதேசங்களில் பெளத்த பிக்குகள் புத்தர் சிலையை வைக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டவண்ணமுள்ளனர். இது போன்ற மிக முக்கிய மற்றும் உணர்ச்சிமிக்க பிரச்சனைகளை கையாள தனி அமைச்சு அவசியம். மேலும் பெளத்தர்களுக்கு புத்த சாசன அமைச்சு என தனியாக இருக்கும்போது, இந்து இஸ்லாமிய மக்களுக்கு தனியான அமைச்சுக்கள் இருப்பதில் தவறேதுமில்லை.
பிரதி அமைச்சுப் பதவிகள் வடபகுதி தமிழர்கள் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றவர்களின் விபரங்கள்
அமைச்சர் | அமைச்சு |
---|---|
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா | பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் |
பிரதமர் ஹரிணி அமரசூரியா | கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி |
விஜித ஹேரத் | சுற்றுலா, வெளிநாடு மற்றும் வெளிநாட்டலுவல்கள் |
இராமலிங்கம் சந்திரசேகர் | கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளம் |
சரோஜா சாவித்திரி போல்ராஜ் | மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் |
கே.டி.லால்காந்த | விவசாயம், நீர்ப்பாசனம், கா மற்றும் கால்நடை |
நளிந்த ஜெயதிஸ்ஸ | சுகாதாரம் மற்றும் ஊடகம் |
சுனில் குமார கமகே | விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகாரம் |
பேராசிரியர் கிரிஷாந்த அபயசேன | விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் |
பேராசிரியர் சந்தன அபேரத்ன | பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி |
பேராசிரியர் ஹர்ஷன நாணயக்காரா | நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு |
பேராசிரியர் உபாலி பன்னிலகே | கிராம பாதுகாப்பு, சமூக பாதுகா மற்றும் சமூக வலுவூட்டல் |
பேராசிரியர் அனில் ஜயந்த (f)பெர்னாண்டோ | தொழில் அமைச்சு |
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி | புத்த சாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் |
சுனில் ஹந்துன்நெத்தி | கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி |
பிமல் ரத்நாயக்க | போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவை |
தம்மிக்க பட்டபெந்தி | சுற்றாடல் |
குமார ஜெயக்கொடி | வலுசக்தி |
வசந்த சமரசிங்க | வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப்பாதுகாப்பு |
சமந்த வித்யரத்ன | பெருந்தோட்டம் மற்றும் சமூக அபிவிருத்தி |
அநுர கருணாதிலக | நகர அபிவிருத்தி, நகர நிர்மாணிப்பு மற்றும் வீடமை |
ஆனந்த விஜேபால | பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரம் |