வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் களம் இறங்குகின்றார்.
படித்த-புதிய-இளம் வேட்பாளர்களுடன் சுயேட்சைக் குழு இலக்கம் 17இல், ஊசி (syringe) சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
வைத்தியர் அர்ச்சுனாவின் அதிரடியான சில பல செயற்பாடுகள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலுள்ள நம்மவர்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அநீதிக்கு எதிரானவர்கள், நல்லது நடக்க வேண்டும் என ஏங்குபவர்களின் ஆதரவை அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
அர்ச்சுனா சமூக வலைத்தளங்களை மிகவும் திறமையாகக் கையாளுகின்றார். நேரடியாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் மக்களுடன் நேரடித் தொடர்பாடலைப் பேணி வருவதால், மக்கள் மத்தியில் அர்ச்சுனாவின் புகழ் மெதுமெதுவாக உயர்வடைந்து செல்கின்றது.
எப்படியாவது உண்மையை மக்களுக்கு நேரடியாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக அர்ச்சுனா மாற்றி மாற்றி பல விடயங்களை முகநூல் நேரடிக் கானொளிகளில் பேசி வந்ததினால், பலருக்கு ஒரு குழப்பமான மற்றும் சலிப்புத் தன்மையான பார்வை அர்ச்சுனா மீது ஏற்பட்டிருந்தது.
இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், சாதாரண பதிவுகள் (posts), படங்கள்(photos), வீடியோக்களைக் காட்டிலும் நேரடிக் கானொளிகள் (live video) மட்டுமே சிறந்த சான்று/சாட்சியாக உள்ளதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் அர்ச்சுனா இயன்றளவு எல்லாவற்றையும் நேரடிக் காணொளிகளில் பதிவிட்டு வருகிறார். உண்மையில் அர்ச்சுனாவை நோக்குவதை விடுத்து, அவர் கதைத்த/கதைக்கின்ற விடயங்களை உற்று நோக்கினால், அதில் ஏதோ ஒரு உண்மை இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அர்ச்சுனா முகநூலில் உண்மைகளைக் கதைக்கும்போது ஏளனம் செய்தவர்கள், அவர் பாராளுமன்றில் கதைக்கும்போது ஏளனம் செய்ய முடியாது. பாராளுமன்றில் பேசப்படும் ஒவ்வொரு சொற்களும் பாராளுமன்ற பதிவேட்டில் ஏற்றப்படும்.
இவ்வாறானதொரு நிலையில் அண்மையில் இடம்பெற்ற அர்ச்சுனாவின் கைது மற்றும் அவரது சிறைவாசம் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் அவரது கைது மற்றும் சிறைவாசத்தின் பின்னர் நல்லதே நடைபெற்றுள்ளதாகக் கருதவேண்டியுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தேவையற்ற பேச்சுகள் மற்றும் நேரடி கானொளிகள் குறைவடைந்துள்ளதுடன், அர்ச்சுனாவும் சற்று சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளார்.
ஒரு சாதாரண மனிதனுக்கு அரசியல் தீர்வு, தமிழ்த்தேசியம் போன்றவற்றிலும் பார்க்க, பக்கத்து தெருவில் நடக்கும் நிகழ்வு/பிரச்சனை மிக முக்கியம்/ஆபத்தானது. சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரச்சனையின்போது தமிழ்த் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே இருந்தார்கள்? (டக்ளஸ் தேவானந்தா தவிர)
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது மாவட்டத்தில் நடக்கும் பாரிய மோசடிகள்/முறைகேடுகள் பற்றிக் கேட்பதற்கு உரிமை அல்லது அதிகாரம் இல்லையா???? சாதாரண விதானைமார் செய்யும் மோசடிகளைக் கூட கேட்கும் திராணியற்றவர்களாகதான் நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.
மேலும் தற்போதைய யாழ் தேர்தல் கள நிலவரத்தின்படி, பல கட்சிகள் சுயேட்ச்சைக் குழுக்கள் என 396 பேர் போட்டியிடுவதால் வாக்குகள் நாலா திசைகளிலும் சிதறும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு இன்னும் சற்று முழு வீச்சுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், கடந்த 2020 தேர்தலில் C.V.விக்னேஷ்வரன் ஒரு ஆசனத்தைப் பெற்றது போன்று, அர்ச்சுனாவும் ஒரு ஆசனத்தைப் பெற அதிக வாய்ப்புள்ளது!