தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா?

இன்று(14/11) நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) தனிப் பெரும்பான்மையைப் பெறுமா என இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

தனித்து ஆட்சி அமைக்க 113 ஆசனங்கள் தேவை. இருப்பினும் திடமான அரசமைக்க குறைந்தது 130 ஆசனங்கள் இருந்தால்தான் ஐந்து வருடங்கள் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியும்.

2020 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் எதிரொலியாக சிங்கள மக்கள் 68 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பொதுஜன பெரமுனவிற்கு வழங்கியிருந்தனர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் எனும் திடீர் அலை மூலம் தெரிவான பலமான அரசை, அதே சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலம் 2022இல் செயலிழக்கச் செய்திருந்தமையை நாம் இவ்விடத்தில் கோடிட்டு காட்ட வேண்டும்.

திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி இலஞ்சம், ஊழல் அற்ற புதிய இலங்கையை உருவாக்கும் எனும் நம்பிக்கையில் சிங்கள மக்கள் தமது பூரண ஆதரவை வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

2020 தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வெறும் 445,958 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தது.
2020 இல் பொதுஜன பெரமுனவிற்கு சிங்கள மக்கள் கொடுத்த ஆதரவை இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேசிய மக்கள் சக்தி குறைந்தது 120 இலிருந்து 130 வரையிலான அல்லது அதற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற அதிக வாய்ப்புள்ளது.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பெரும்பாண்மை என்பன ஒரே கட்சியின் வசம் இருந்தால், இலங்கையில் மிகப் பலமான ஆட்சி அமையும். இப்படியான ஒரு நிலையில் தேசிய மக்கள் சக்தியினால் நினைத்தது எல்லாவற்றையும் செய்ய முடியும். குறிப்பாக அரச செலவீனங்களின் குறைப்பு, அரச திணைக்களங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் வருமான இழப்புகளை சீர் செய்தல், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கான தண்டனை, சிறப்பான கிராம அபிவிருத்தி போன்ற நாட்டிற்கு தேவையான பல நல்ல செயற்பாடுகள் இடம்பெறும்.

இதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள்(மத்திய வங்கி உட்பட), ஊடகவியலாளர்களின் படுகொலைகள், ஈஸ்டர் குண்டு தாக்குதல், உகண்டாவிற்கு அனுப்பப்பட்ட டொலர்கள் என எல்லாவற்றையும் விசாரிப்பதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த, ரணில் மற்றும் கோத்தபாய உட்பட பலர் குற்றவாளிகளாக இனம் காட்டப்படலாம்!!
(இதற்காக சர்வர்தேசத்தின் மறைமுக எதிர்ப்பினை இலங்கை அரசு நிச்சயமாக எதிர்கொள்ளும்)

இருப்பினும் இலங்கையை ஆழுபவர்கள் தமது கைக்குள்ளே இருக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்புகின்றன. அத்துடன் இலங்கையில் நடைபெறும் ஆட்சி நல்லதாக இருந்தால் சர்வதேசத்திற்கு பொறுக்காது. கெட்டதாக இருந்தால் மக்கள் போராட்டம் மூலம் ஆட்சி பலவீனப்படுத்தப்படும் எனும் எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. எனவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!!!!

முக்கிய குறிப்பு : முள்ளிவாய்க்கால் படுகொலை, போரினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள், வடக்கு கிழக்கில் இராணுவ குறைப்பு போன்ற விடயங்கள் எக்காலத்திலும் இலங்கையில் இடம்பெற மாட்டாது என்பதை தமிழர்கள் ஆகிய நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles