ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னர் கட்சியின் பெயரைத் திருடினார்கள், இப்போ கட்சியின் சின்னத்தை திருடியுள்ளார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், 1956 முதல் இன்றுவரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் (TNA) அங்கம் வகித்து, இம்முறை தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் டெலோ, புளொட் போன்ற கட்சிகளையே சுமந்திரன் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார். 90களில் வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களில் டெலோ மற்றும் புளொட் செய்த கொடுமைகளை சுமந்திரன் மீண்டும் மக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
அதேவேளை தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் சுமந்திரன் “மாம்பழத் திருடர்கள்” என வர்ணித்துள்ளதுடன், அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேணும் எனவும் கேட்டுள்ளார்.
அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் கொடுத்த C.V.விக்னேஷ்வரனையும் சுமந்திரன் விட்டுவைக்கவில்லை. (அபலைப் பெண் என C.V.விக்னேஷ்வரன் குறிப்பிட பெண் உண்மையில் அபலைப் பெண் அல்ல. அவர் கோடீஸ்வரி என்பது பலருக்குத் தெரியாது).
மேலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு பகிரங்க சவால் விட்ட சுமந்திரன், மதுபானசாலைக்களுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிட முடியுமா எனவும் கேட்டுள்ளார். அநுர அரசாங்கம் அந்த தகவல்களை வெளியிட்டால், அதில் தன்னுடன் சேர்ந்து போட்டியிடும், தன்னுடன் முழுமையாக ஒத்துழைக்காத ஶ்ரீதரனுடைய பெயர் இருந்தால்,ஶ்ரீதரனுக்கு மக்கள் மத்தியில் பாரிய பின்னடவு ஏற்படலாம் என சுமந்திரன் கருதி இருக்கலாம்!! இதன் மூலம் ஶ்ரீதரனையும் கட்சியிலிருந்து முழுமையாக ஓரம் கட்டலாம் என சுமந்திரன் கணக்கு போட்டிருக்கலாம்!!
கடந்த தேர்தலில், தமிழரசுக் கட்சி சார்பில் ஶ்ரீதரன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தார். மேலும் அவர் தொடர்ந்தும் சுமந்திரனின் வழியில் முழுமையாகச் செல்லாமல், மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், புளொட், டெலோவுடனும் நட்பைப் பேணி வருகிறார். மேலும் ஶ்ரீதரன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவை அவசர அவசரமாக சென்று சந்தித்தன் காரணமும் சற்று மர்மமாகவே உள்ளது.
தமிழருக்கு தமிழ்க் கட்சிகளால் இதுவரை எவ்வித நன்மைகளும் நடைபெறவில்லை. 2015ல் நாட்டை ஆட்சி செய்த நல்லாட்சி அரசுடன் மிக மிக நெருக்கமாக இருந்தும் தமிழருக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம், அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியாத நிலமையில் இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் எவ்வாறு பாரம்பரிய கட்சிகளை நம்புவது என்பதும் இன்று தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்.
சட்டப் புலமை கொண்ட சுமந்திரன் தமிழரசுக் கட்சியை காப்பாறுவாரா, சிதைத்துவிடுவாரா என்ற ஒரு பாரிய சந்தேகமும் தமிழர்கள் மத்தியில் உள்ளது. புலம்பெயர் தமிழர்கள், பல முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என பலரினதும் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ள சுமந்திரன், இம்முறை தேர்தலில் புதியவர்களுடன் களம் இறங்குகின்றார். மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகின்றது என்பதை நவம்பர் 15ம் திகதி தெரிந்துகொள்வோம்.