யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என 396பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஒற்றுமையின்மையால் ஏற்பட்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவும், அதிக சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதும் மற்றும் அதிகரித்துச் செல்லும் பிரதான சிங்கள கட்சிகளின் (NPP..) செல்வாக்கும் பாரிய தாக்கத்தை யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்படுத்தப் போகின்றது.
தமிழரசுக் கட்சி (சின்னம் வீடு)
2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் பிரதான தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி 95,590 வாக்குகளை இழந்திருந்தது. 2020இல் கட்சி இருந்த நிலமையுடன் ஒப்பிடும்போது, 2024இல் கட்சியின் நிலமை மிக சிக்கலான மோசமான நிலமையாகவே உள்ளது. கட்சியின் முக்கிய நீண்ட கால உறுப்பினர்களின் வெளியேற்றம், சுமந்திரனின் ஆதிக்கம், அறிமுகம் குறைந்த புதிய வேட்பாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி என பல வழிகளிலும் தமிழரசுக் கட்சிக்கு இறங்கு முகத்திற்கான நிலமையே காணப்படுகிறது.
யாழ் மாவட்டத்திற்கான வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீதரன் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இரண்டாம் நிலையில் முன்னாள் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் அல்லது சுமந்திரன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சின்னம் சைக்கிள்)
2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 40,000 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாவட்டரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. 2024 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உடையும் வாக்குகளில் கணிசமான பங்கு முன்னணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மிகுதி வாக்குகள் தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த அணியினரின் ஜனநாயக தமிழரசுக் கட்சிக்கும் (மாம்பழம்), விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் (மான்), சொற்ப அளவில் தேசிய மக்கள் சக்திக்கும் (திசை காட்டி) கிடைக்கும்.
கடந்த தேர்தலில் தீவகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னணியினர் சிறப்பாக பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியது. இருப்பினும் இம்முறையும் கடும் போட்டியின் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை யாழ் மாவட்டதில் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
அங்கஜன் அணி(தபால் பெட்டி)
2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், அங்கஜன் அணி 32,000 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாவட்டதில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தனர். இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன், கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு நெருக்கமான ஆள் என பல குழப்பங்கள் யாழ் மக்கள் மத்தியில் இருப்பினும், இவர் மக்களுடன் அனுகும் முறை மற்றும் திறமையான பிரச்சார செயற்பாடுகளினால், இம்முறையும் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
EPDP (வீணை)
2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், EPDP 15,500 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று யாழ் மாவட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது. நீண்ட கால (யாழ்) அரசியல் அனுபவம், பலருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமை, தீவக வாக்குகள் என டக்ள்ஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கி மிக உறுதியாக இருக்கிறது. இவரது தெற்கு அரசியல் இராஜ தந்திரங்கள் வடக்கு மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே இம்முறையும் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றியீட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி (திசை காட்டி)
இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய அண்மைய நிகழ்வு இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024. தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கா பெரு வெற்றியீட்டி இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக பதவியேற்றார்.
நாடளாவியரீதியில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த எழுச்சி வடக்கு கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதை, தமிழ்க் கட்சிகள் கட்சி வேறுபாடின்றி தேசிய மக்கள் சக்தியை “சிங்கள” கட்சி எனும் தொனியில் எதிர் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி எந்தளவிற்கு யாழில் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நேர்மையான, இளம் தலைமுறையினரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி, யாழில் உள்ள பல சங்கங்கள், திணைக்களங்கள் மற்றும் பல அமைப்புகளில் தமது செல்வாக்கினை வைத்துள்ளனர்.
மேலும்,மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் பாரம்பரிய தமிழ் அரசியலில் ஏமாற்றம் அல்லது சலிப்படைந்த மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழக்கி பார்க்க முன்வருவார்கள். எனவே இம்முறை தேர்தலில், தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை வெல்லக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைப் போக விடாமல் தடுத்தால், அந்த வாக்குகள் தமக்கு வருமென அனைத்து தமிழ்க் கட்சிகளும் முழுமையாக நம்புகின்றன. எனவே தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கடுமையான பிரச்சாரங்களை வரும் வாரங்களில் நாம் காணக்கூடியதாக இருக்கும்.
குறிப்பாக இம்முறை தேர்தலில் ஆசனங்களைப் பெறமாட்டார்கள் என நம்பப்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (சங்கு சின்னம்), தமிழரசு கட்சியின் மாற்று அணி (மாம்பழ சின்னம்) மற்றும் மதுபான அனுமதிபத்திர விடயத்தில் மிக மோசமாக சேதமடைந்திருக்கும் C.V.விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) ஆகியோரால் தேசிய மக்கள் சக்திக்கெதிரான பிரசாரங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படலாம்!
– மாற்றம் ஒன்றே மாறாதது –