சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு வழங்கி, பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் 121,177 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் (முன்னணி தவிர்த்து) சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் 116,688 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சஜித் பிரேமதாசாவை விட 4,489 வாக்குகள் மட்டுமே குறைவாகும்.
இவ்வாறானதொரு நிலையில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவது மேலும் வாக்குகளைப் பிரிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு வழங்கிய தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியே இம்முறை பாரிய சரிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளது. மேலும் மற்றைய தமிழ்க் கட்சிகளின் வாக்குகளும் சரிவை சந்திக்கும் நிலையிலேயே உள்ளது.
அரசியல் நாகரீகம் கருதி, தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவதைத் தவிர்த்தது போன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழில் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அல்லது சுமந்திரன் சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனைத் தடுத்திருக்க வேண்டும்.
இன்னொரு கட்சியின் முடிவுகளில் சுமந்திரனை தலையிடும்படி எவரும் கேட்கவில்லை. தனது கட்சியிலுள்ள பலரது எதிர்ப்புகளையும் மீறி ஆதரவு கொடுக்கத் தெரிந்த சுமந்திரனுக்கு, தனது கட்சியின் வாக்கு வங்கிக்கே ஆப்பு வருகிறது என தெரியும்போது அதைத் தக்க வைக்க சஜித்துடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே எமது நிலைப்பாடு.
எமது தமிழ் அரசியல்வாதிகள் சேர்ந்தும் பயணிக்க மாட்டார்கள், எதிர்த்தும் அரசியல் செய்ய மாட்டார்கள். அதற்காண திராணி அற்றவர்களாகவே வடக்கு வாழ் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும்.
என்னதான் நேர்மை நீதி என இவர்கள் சொன்னாலும், அவர்கள் செய்வது புனிதமான அரசியல் இல்லை என்பதை யாழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாழ் தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உட்பட சில ஆயிரம் வாக்குகள் சஜித் அணிக்குக் கிடைக்கலாம்.
இந்த தேர்தல் கடந்த கால தேர்தல்கள் போன்றதல்ல. 396பேர் போட்டியிடும் தேர்தலில், கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்றது. எனவே மக்கள் தெளிவாக சிந்தித்து, தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.
– மாற்றம் ஒன்றே மாறாதது –