சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீன அரசின் அழைப்பின் பெயரில் சீனா சென்றுள்ளதாக தெரியவருகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, இலங்கை சுதந்திரக்கட்சியின் சில அதிகாரிகளையும் அழைத்துள்ள சீன அரசு, கோத்தபாய ராஜபக்ச மற்றும் சுதந்திரக்கட்சி அதிகாரிகளுக்கிடையிலான ரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை ஒழுங்கு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அரசின் இந்த நடவடிக்கை 2020இல் கோத்தபாய ராஜபக்சவை இலங்கையின் ஜனாதிபதியாக ஆக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சீனாவின் அதிபர் தான் சாகும்வரை சீனாவை ஆளும்வகையில் அரசியலமைப்பை மாற்றி, உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகியுள்ளார். இப்படியான ஒரு முயற்சியை மகிந்த இலங்கையில் செய்ய திட்டமிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

வழமையாக, இலங்கையில் அரசியல் நகர்வுகள் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நிகழ்ச்சி நிரலின் படிதான் நடைபெறும். இருப்பினும் கடந்த காலத்தில் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்தபோது, சீன அரசின் ஆதிக்கம் இலங்கையில் கணிசமாக அதிகரித்திருந்தது. இதற்க்கு மகிந்த அரசும் தமது பூரண ஆதரவை வழங்கி இருந்தது.

நிலமை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கண்ட அமெரிக்கா, இந்திய அரசின் உதவியுடன் அதிரடியாக இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்படுத்தியிருந்தது.

நிரந்தரமாக இலங்கையை சர்வாதிகாரமாக ஆழ நினைந்த மஹிந்தவின் கனவு தவிடுபொடியாகியது. இருப்பினும் இலங்கையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் சீன அரசின் பூரண ஆதரவுடன் மகிந்த அணி மிகவும் அர்ப்பணிப்புடன் முழு வீச்சில் செயற்பட்டுவருகிறது. (அதற்கு சான்றாக கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த அணி பெற்ற வெற்றியை நாம் எடுத்துக்கொள்ளலாம்.)

இதை பிரதமர் ரணிலோ அல்லது ஜனாதிபதி மைத்திரியோ கண்டும் காணாமல் இருப்பது அவர்களின் இயலாமையா அல்லது வேறு ஏதும் நுட்பமான திட்டங்களை (மாஸ்டர் பிலான்) வைத்திருக்கிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.

சீன அரசின் நிகழ்ச்சி நிரலின்படி கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால், இலங்கை இந்தியாவையோ அல்லது அமெரிக்காவையோ கருத்திலெடுக்காமல், தான்தோன்றித்தனமாக சர்வாதிகாரப் போக்கில் செயற்படுமென்பதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை.

Latest articles

Similar articles