ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேறியது அமெரிக்க இராணுவம்

இரு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவம் முற்றாக வெளியேறியுள்ளது.

உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர், அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் உள்நுழைந்தன.

இருபது வருடத்தில் சுமார் 2,400 அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர். பல அப்பாவிப் பொது மக்களும் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் இவ்வருடம் செப்டெம்பெர் 11ம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேறி விடுவார்கள் என அறிவித்திருந்தார்.

தலிபான்கள் மெது மெதுவாக எவ்வித யுத்தமும் செய்யாமல் ஆப்கானிஸ்தானை தமது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இருப்பினும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்படி ஆகஸ்ட் 31ம் திகதிவரை நேச நாட்டு படையினருக்கு உதவிய மற்றும் வேலை பார்த்த மக்களை காபூல் விமான நிலையம் ஊடாக வெளியேற அனுமதித்திருந்தனர்.

அதன்படி அமெரிக்க படையினர் இதுவரை ஏறக்குறைய 123,000 மக்களை வெளியேற்றியுள்ளனர். இன்று (31/08) அதிகாலையுடன் மீட்புப் பணி முடிவுக்கு வந்தவுடன், தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தாம் முற்றாக சுதந்திரம் அடைந்துள்ளதாக தலிபான்களின் பேச்சாளர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் பெரும்பாலான இராணு தளபாடங்கள் தலிபான்கள் வசம் சிக்கியுள்ளது. இதில் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளும் உள்ளடங்கும். மேலும் தாம் முன்னரைப்போல் பெண்களின் சுதந்திரம், மற்றும் கல்வி தொடர்பாக கடுமையாக நடந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள தலிபான்கள், மேலைத்தேய நாடுகளுடன் இணைந்து செயற்படவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தலிபான்களை அங்கீகரிக்க மேலைத்தேய நாடுகள் முன்வரவில்லை. தலிபான்களின் வரப்போகும் ஆட்சி தொடர்பாக உலகின் பல தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் அச்ச உணர்வையே கொண்டுள்ளனர். இருப்பினும் சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் தலிபான்களுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளன.

தலிபான்கள் தாம் தெரிவித்துள்ள வாக்குறிதிகளை நிறைவேற்றுவார்களா, உலக நாடுகளுடன் இணைந்து செயற்படுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Latest articles

Similar articles