இராணுவ இலங்கை !!

இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் தரத்தில் உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்ற டி.சொய்சா என்பவரே உடனடி அமுலுக்கு வரும்வகையில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கையின் இராணுவ தளபதியான சவேந்திர சில்வா தொடக்கம் டி.சொய்சா வரைக்கும் அரச உயர் பதவிகளில் ஜனாதிபதிக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளே (ஓய்வு பெற்ற) நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நியமனங்கள் அனைத்தும் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியும், தற்போதைய இலங்கை ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்சவினால்தான் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நாடறியும். உலகறியும்.

ஒரு ஓய்வு பெற்ற முன்னாள் உயர் இராணுவ அதிகாரியை, அரச நிறுவனங்க்களில் மிக உயர் பதவிக்கு நியமிக்கும்போது, அமைச்சர்கள் கூட மூக்கை நுளைக்க முடியாத நிலை ஏற்படும். அனைத்து அரச பொது நிறுவனங்களும் ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும். ஊழியர்கள் அல்லது தொழிலாளர்கள் போன்றோரது அடிப்படை உரிமை என்பது கேள்விக்குறியாகும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள டொலரின் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் நீண்ட நேர மின்வெட்டுப் பிரச்சனை போன்றவற்றால் அனைத்துப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. பல நூற்றுக் கணக்கான உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. 

இவ்வாறான நிலையினால் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் மக்கள் வீதிக்கு இறங்கி அரசிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். எதிர்க்கட்சியினர் மற்றும் பெளத்த துறவிகள் போன்றோரும் அரசினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

சிங்கள அரசியல்வாதிகளே ஐ.நா சென்று முறையிடுகின்றனர். எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலாக ஆளும் கட்சியில் அமைச்சுப் பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற கடும் சிங்கள போக்குடையவர்களே அரசினை வெளிப்படையாக, கடுமையாக விமர்சித்தார்கள்.

நிலமை மோசமடைவதை உணர்ந்த ஜனாதிபதி, விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் கடும் போக்குடன் செயற்படத் தொடங்கினார். தமது வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய, மிகவும் விசுவாசமான, கடும் சிங்களப் போக்குடைவர்களுமான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றவர்களின் அமைச்சுப் பதவிகளைப் பறித்தார்.

அதிகாரத்திற்கு ஜனாதிபதியும், அரசியலுக்கு அண்ணன் மகிந்தவும், நிதிக்கு தம்பி பசிலும் என ராஜபக்ச சகோதரர்களின் இரும்புப் பிடியில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. ராஜபக்ச சகோதரர்களை நம்பி 69 இலட்சம் மக்கள் வாக்களித்து, கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினார்கள்.

விளைவு? வாக்களித்தவர்களே வீதிக்கு இறங்கி விளக்குப் பிடிக்கும் வங்குரோத்து நிலைதான் என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.

Latest articles

Similar articles