இலங்கையை விழுங்கும் நாடுகள்

தவறான கணிப்புகள் மற்றும் திட்டமற்ற முடிவுகளை ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டமையால், இலங்கை இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தளவிற்கு இருக்கும் என ராஜபக்ச சகோதரர்கள் நினைத்திருக்கவில்லை என்பது, நாட்டில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் மூலம் அறிய முடிகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு,
மின்சார தடை,
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு,
மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு

என எல்லாமே ஒரே நேரத்தில் இடம்பெற்றதால், அரசாங்கமும் முழுமையாக செயலிழந்தது. நாட்டில் மக்கள் போராட்டங்கள் ஆரம்பமாகின.

இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகள் தமக்கேற்றவாறு திட்டங்களை வகுத்தன. தனக்கே உரிய பாணியில் இந்தியா முதலில் களத்தில் இறங்கியது. இலங்கை மக்களுக்கு வெளிப்படுத்தப்படாமல் சில ஒப்பந்தங்களை இலங்கை அரசுடன் மேற்கொண்டு, பில்லியன் கணக்கில் கடன் உதவிகளை வழங்கி இலங்கைக்கு தற்காலிக அவசர உதவிகளை வழங்கியுள்ளது.(கடன்கள் பிற்காலத்தில் திருப்ப செலுத்தப்பட வேண்டும்)

மேலும் ஒரு படி மேலே போய், இந்திய நிதி அமைச்சரே நேரடியாக சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கைக்கு உதவும்படி பரிந்துரைத்திருந்தார்.

இவற்றையெல்லாம் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்த சீனா, மேலும் சிறப்பாக திட்டங்களைத் தீட்டி தற்போது களத்தில் இறங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாகவே தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைக்கு நிலையான, உறுதியான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு தாம் உதவுதாக சீனா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையின் சில முக்கிய நிலப்பரப்புகளை தனது கட்டுப்பாட்டில் (குத்தகைக்கு) வைத்திருக்கும் சீனா, இன்னும் எங்கெங்கு நிலப்பரப்புகளைக் கேட்கப் போகின்றதோ தெரியவில்லை!!

2009ல் விடுதலைப் புலிகளை முழுமையாக அழிப்பதையே முழு எண்ணமாகக் கொண்டிருந்த இந்தியா, இலங்கையின் பொருளாதார துறையில் ஆதிக்கம் செலுத்தி, இலங்கையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நினைத்திருக்கவில்லைப்போலும்.

அன்று அந்த சந்தர்ப்பத்தை சிறப்பாகப் பயன்படுத்திய சீனா, இலங்கையில் இலகுவாக கால் பதித்து, இனி எக்காலத்திலும் அசைக்க முடியாதவாறு தன்னைப் பலப்படுத்திக்கொண்டது. ராஜபக்ச சகோதரர்களை மக்கள் ஆட்சியிலிருந்து விரட்டினாலும், சீனாவின் இருப்பை சட்டப்படி எவரும் ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

2009ல் இந்தியா விட்ட மாபெரும் தவறை, இனி எத்தனை பில்லியன் டொலர்கள் குடுத்தாலும், எத்தனை ஒப்பந்தங்களைச் செய்தாலும் திருத்த முடியாது என்பது மட்டும் திண்ணம்.

தற்போதைய மோடி அரசாங்கம் பிராந்தியரீதியாக சிறப்பாக சில பல திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றபோதிலும், முன்னைய காங்கிரஸ் அரசாங்கம் இழைத்த தவறை மோடி அரசால் திருத்த முடியாது என்பதை எவரும் மறுக்கமுடியாது.

Latest articles

Similar articles