வலுவடைய இருக்கும் மக்கள் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இன்று(18/04) 17 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த எவரும் இடம்பெறவில்லை. இருப்பினும், பதவியேற்ற அனைவரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மைகள் என அனைவரும் அறிவர்.

புதுவருடத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக அரசியலிலும் சரி, மக்களின் போராட்டங்களிலும் சரி பெரிதாக ஒரு நகர்வுகளும் இடம்பெறவில்லை. இன்று முதல் நாட்டில் வழமையான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதியும் தனது அமைச்சரவையை மறு சீரமைப்பதாகக் கூறி, (பெரும்பாலும்)இளம் உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்த பல மூத்த உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்க்கப்படவில்லை என்று சொல்வதிலும் பார்க்க, அவர்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருக்கவில்லை என்பதே உண்மை.

காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் அமைதிவழிப் போராட்டம் அரசிற்கு எவ்வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், சர்வதேசத்திற்கு இலங்கை மக்களின் போராட்டத்தின் தன்மையை தெளிவாக எடுத்துக் காட்டும்.

புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்ததன் மூலம், அவர் தான் பதவி விலக மாட்டேன் என்பதை தெளிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இதேவேளை பிரதமருக்கும் பதவி விலகும் எண்ணம் இல்லை என்பது கடந்த வாரம் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெளிவாகத் தெரிந்தது.

இவ்வாறு சிக்கலான ஒரு அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு என்பன மீண்டும் மக்களை துன்பத்தினுள் தள்ளும். இந்நிலையில் சாதாரண மக்கள் வீதிக்கு வந்து, மூலை முடுக்கெல்லாம் எதிர்ப்பினை தெரிவிப்பார்கள். கடந்த முறை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை விட இம்முறை கடுமையான எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்துவார்கள். இதன்போது ராஜபக்ச அரசின் நிலை மேலும் பல மடங்கு சிக்கலடையும்.

மக்களின் போராட்டத்தை ராஜபக்ச அரசு எவ்வாறு கையாளப் போகின்றது என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது. சில வெளிநாடுகளின் பேச்சைக் கேட்டு, மக்களை அடக்கி ஆளலாம் என நினைத்தால், இலங்கை சுடுகாடாக மாறும் என்பது மட்டும் திண்ணம்.

Latest articles

Similar articles