இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் போசாக்கின்மை பிரச்சனையில், மலையக தோட்ட பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போசாக்கின்மையால் பெருந்தோட்டப் பகுதியில் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2.9 மில்லியன் மாணவர்களுக்கு போசாக்கு குறைபாடு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனால் கல்வி அமைச்சினால் 1.1 மில்லியன் மாணவர்களுக்கே உணவுத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
போசாக்கின்மை பிரச்சனை எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும் என குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக முறையான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.