புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரத்தினுள் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சவாக மாறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் செய்த முதல் வேலை, மக்களின் பொது பாதுகாப்பை மேற்கொள்ள முப்படையினரை அழைக்கும் விதத்தில் அதி விஷேட வர்த்தமானியை வெளியிட்டதுதான்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதாகத் தெரிவித்து, சொந்த இன மக்கள் மீதே கொடூரமாகத் தாக்குதல்களை நடத்தி பத்திற்கும் மேற்பட்ட மக்களை காயப்படுத்தியது மட்டுமன்றி, பல ஊடவியலாளர்கள்(உள்ளூர் மற்றும் வெளிநாட்டு) மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.




ஏற்கனவே நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், படையினர் மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் கேள்விக்குட்படுத்த முடியாது. எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் மூர்கமாகச் செயற்படவும் வாய்ப்புள்ளது.
ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க இந்தளவு பலத்தைப் பிரயோகிக்க வேண்டிய அவசியமில்லை. அதுவும் இவ்வளவு அவசரமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இன்று(22/07) மதியம் தாம் கைப்பற்றிய அரச கட்டடங்களை மீள ஓப்படைபோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தும், ஏன் ரணில் விக்கிரமசிங்க அவசரப்பட்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மகிந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போல, ரணிலும் ஊடகவியலாளர்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளாரோ என்ற அச்சமும் எழுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் சாட்டில் பல ஊடகவியலாளர்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
பல தென்னிலங்கை ஊடகங்கள் ஏற்கனவே அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளன. சில ஊடகங்கள் ஒரு படி மேலே போய், ஆர்ப்பாட்டக்காரர்களை அந்நியர்களாகப் பார்க்கும் நிலையை தோற்றுவிக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே செயற்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் ரணிலில் கட்டுப்பாட்டில் வந்துள்ளதுபோல் தோன்றுகின்றது!!! வரும் நாட்களில் இவர்களின் உண்மை முகமும் தெரியவரும்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் விடயத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டும் ரணில்,
👉 மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நாட்டில் கொள்ளையிடப்பட்ட பணத்தை, மீள நாட்டிற்குள் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டுவாரா?
👉 அல்லது ஈஸ்டர்தின மனித வெடிகுண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்வதில் ஆர்வம் காட்டுவாரா?