சட்ட ஒழுங்கு அமைச்சராக ரணில், தப்பியது மஹிந்த கோஷ்டி

இன்று (25/02) மறுசீரமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சட்ட ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அல்லது ராஜித சேனாரட்னவிற்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட இந்த அமைச்சு பதவியை பிரதமர் ஏற்றுக்கொண்டமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Ranil Wicramasinghe Law order minister

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற பல பாரதூரமான ஊழல்கள் மற்றும் பதவிகளை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக எந்த விசாரணைகளோ, கைதுகளோ இடம்பெறவில்லை. இது தொடர்பாக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என பலரும் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தபோதும் பிரதமரோ, ஜனாதிபதியோ எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டையாக பிரதமரே இருக்கிறார் என பரவலான ஒரு குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையில், புதிதாக சட்ட ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்களை தண்டிப்பாரா என்பது கேவிக்குறியே !!!

2015 தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ச, தான் அலரி மாளிகையை விட்டுச் செல்ல முன்னர் அவசரமாக ரணில் விக்கிரமசிங்கவை நேரில் வரவழைத்து உரையாடியிருந்தமை பலருக்கு இன்னும் ஞாபகம் இருக்கலாம். அந்த சந்திப்பில் ரணில், மஹிந்தவிற்கு என்ன வாக்குறுதிகளை வழங்கினார் என்று எவருக்கும் தெரியாது. இருப்பினும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, மஹிந்த ராஜபக்ச தனக்கும், தனது குடும்பத்திற்கும், சகோதரர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி ரணிலிடம் கேட்டிருந்ததாக அறிய முடிந்தது.

இறுதி யுத்தம் நடைபெற்றபோது ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவையே சிறைக்கு அனுப்பி அழகு பார்த்தவர்கள் மஹிந்தவும் சகோதரர்களும். சரத் பொன்சேகாவிற்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலைபற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த ஒரு காரணத்தாலேயே பலரும் சரத் பொன்சேகா சட்ட ஒழுங்கு அமைச்சராக வரவேண்டுமென விரும்பினர். ஒரு ராணுவ தளபதியாக இருந்தவர் சட்ட ஒழுங்கு அமைச்சராக பொறுப்பேற்பதில் எவ்வித கஷ்டங்களும் இருந்திராது. இருப்பினும் அரசியல் ஆடுகளத்தில் ‘திறமை’ ‘உண்மை’ போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு வேறு சில காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதால், சரத் பொன்சேகாவிற்கு இந்த பதவி கிடைக்காமல் போயுள்ளது.

ஒரு நாட்டில் சட்டம், ஒழுங்கு என்பன ஒழுங்காக இருக்கும்பட்சத்திலேயே அந்நாட்டின் அபிவிருத்தி உண்மையானதாக இருக்கும். எனவே புதிய சட்ட ஒழுங்கு அமைச்சராகியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது கடமைகளை அரசியல் ஆதாயமில்லாமல் செய்வாரெனில், இலங்கை சிறப்பானதொரு நாடாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

 

Latest articles

Similar articles