ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இன்றிலிருந்து (06/05) மறு அறிவித்தல்வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும்.
ஜனாதிபதியின் இந்த சடுதியான முடிவிற்கு நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் மற்றும் பாராளுமன்றம் அருகே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்றவை காரணங்களாகக் இருக்கலாம் எனக் கூறப்படுகின்றபோதிலும், பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகும்படி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தமையே முக்கிய காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
ஏனெனில், திங்கட்கிழமை(09/05) பிரதமர் பதவி விலகினால், மகிந்தவின் அணி நாட்டின் பல பகுதிகளில் குழப்பங்களை மேற்கொள்ளலாம் என்னும் ஐயத்தினால்தான் ஜனாதிபதி அவசரமாக அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார் எனத் தோன்றுகின்றது.
ஜனாதிபதிக்கு மகிந்த அணியினரின் திட்டங்கள் பற்றி உளவுத் தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெற்றிருக்கலாம். மேலும் அண்ணனின் ஆட்களைப் பற்றி தம்பிக்கும் நன்றாகத் தெரியும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் பாரிய வெற்றி பெற்றுள்ளது. அரசாங்கம் பதவி விலகாவிடின் வரும் 11ம் திகதி முதல் தொடர் ஹர்த்தால் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்திருந்தன.
அமைதியான முறையில் தொடர் ஹர்த்தால் இடம்பெறும்போது, அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. மிஞ்சிப்போனால் ஊர்வலங்களைத் தடுக்க முடியுமே தவிர, இயல்பு நிலையை உருவாக்க முடியாது.
மேலும், பாராளுமன்றமும் வரும் 17ம் திகதிதான் கூடவுள்ளது. ஆகவே பாராளுமன்றம் அருகே அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை.
மேலும் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க தொடுக்கப்பட்ட வழக்கு வரும் 10ம் திகதி விசாரிக்கப்படவுள்ளது. ஒருவேளை முடிவு அரசாங்கத்திற்கு சாதகமாக வந்தால், ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த அவசரகாலச் சட்டம் உதவலாம்.
எது எவ்வாறு இருப்பினும், பிரதமர் பதவி விலகினாலும் சரி விலகாவிட்டாலும் சரி, எவர் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தாலும், அது காலிமுகத்திடல் மற்றும் ஏனைய இடங்களில் இடம்பெற்றுவரும் அமைதிமுறையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு ஆபத்தாக அமையலாம் என்பதே உண்மை.
அவசரகால நிலையின்போது பொதுமக்களுக்கு சாதகமற்ற பின்வரும் நடைமுறைகளை காவல்துறையினரோ, படையினரோ பின்பற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
🔴 பிடியாணையின்றிக் கைது செய்தல்
🔴 48 மணி நேரத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் தடுத்துவைத்தல்
🔴 எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்தல்
🔴 நீதிமன்றினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பித்தல்
🔴 சட்டங்களை இடைநிறுத்தல்
🔴 மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்குகளையும் தொடர முடியாது
