அமைதி வழியில் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில், பொதுஜன பெரமுனவின் காடையர்கள் புகுந்து நாசம் விளைவித்ததால், இன்று இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் அரசிற்கெதிரான கலவரங்கள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக தென்னிலங்கையில் மக்கள் கடும் ஆக்ரோசத்துடன், பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ச அரசிற்கு சார்பான அரசியல்வாதிகளை தேடி அலைகிறார்கள்.
மகிந்த ராஜபக்சவின் பல இல்லங்களில் ஒன்றான குருநாகல் இல்லத்திற்கும் மக்கள் தீவைத்துள்ளனர். அத்துடன் மகிந்தவின் பெற்றோர்களினது நினைவுத் தூபிகளும் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம்வகித்த பல அமைச்சர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களது 50 இற்கும் மேற்பட்ட வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன. இதில் பல சுந்ததிரக் கட்சி உறுப்பினர்களது வீடுகள், பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்சவின் வீடுகளும் உள்ளடக்கம்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும், காலி வீதியில் இரத்மலானை விமான நிலையத்திற்கு செல்லும் சில வாகனங்களை மக்கள் மறித்து, அரசியல்வாதிகள் யாரும் தப்பிச் செல்கிறார்களா என சோதனை செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து EX-47002 எனும் பதிவுடைய விமானம் ஒன்று இன்று(10/05) அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த விமானத்தில் யாரும் முக்கிய அரசியல் புள்ளிகள் இருந்தார்களா என்று இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. இதே விமானம் கடந்த 5ம் திகதி அதிகாலையும் இலங்கைக்கு வந்து சென்றுள்ளது.
