வரவு செலவு திட்டத்தில் அதிருப்தி – எதிர்க்கட்சிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பலன் ஏதும் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியால் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு எவ்வித தீர்வும் வரவு செலவு திட்டத்தில் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்கள் தொடர்பான எவ்வித திட்டமும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவர் அனுர குமார திசாநாயக்கா பட்ஜெட் தொடர்பாக குறிப்பிடுகையில், பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான எந்தவொரு பரிந்துரையையும் ஜனாதிபதி இந்த வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவில்லை. நிவாரணம் கிடைக்குமென எதிர்பார்த்திருந்த மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பான ஜனாதிபதியின் திட்டங்கள் மட்டுமே இந்த பட்ஜெட் என தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவு திட்டத்தில் தோட்ட தொழிழாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சிய போக்கு எம்மை ஏமாற்றமடையச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles