மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய் உயிரிழந்தமை தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரால் அமைக்கப்பட்ட விசேட குழு மன்னார் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பத்து வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த 28 வயதுடைய பெண், கர்ப்பமாகி முதல் பிரசவத்திற்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போதே தாயும் சிசுவும் இறந்துள்ளனர். இதன் பின்னர் ஊர் மக்கள் வைத்தியசாலையில் திரண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வடபகுதி வைத்தியசாலைகள் கொலைக் களங்களாக மாறிவருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.