யாழ் தேர்தல் மாவட்டத்தில் 2015 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவாந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அங்கஜன் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியன மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன.

இதேவேளை வடமாகாண சபை முன்னாள் முதல்வரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் போட்டியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (சின்னம் 🐟) 35,927 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் யாழ் மக்கள் அங்கீகரித்து ஒரு ஆசனத்தைப் பெறச் செய்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

2015 நாடாளுமன்ற தேரத்லுடன் ஒப்பிடும்போது, யாழ் தேர்தல் மாவட்டத்தில் மட்டும் இலங்கை தமிழரசுக் கட்சி 94,590 வாக்குகளை இழந்துள்ளது. இது ஒரு மாபெரும் இழப்பாகும்.

நல்லாட்சி அரசின் முழு ஆசீர்வாதம் இருந்திருந்தும் எதையுமே மக்களுக்குப் பெரிதாகச் செய்திராமை, பழைய வேட்பாளர்களே தேர்தலில் மீண்டும் போட்டியிட்டமை, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமை போன்ற காரணங்களால் இம்முறை மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியாமல் போயுள்ளது.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (சின்னம் 🚲) பல சவால்களின் மத்தியில் போட்டியிட்டு, யாழ் தேர்தல் மாவட்டத்தில் 55,303 வாக்குகளப் பெற்று ஒரு ஆசனத்தையும் வென்றது. 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, இது ஏறக்குறைய 268% அதிகரிப்பாகும். அவர்களைப் பொறுத்தமட்டில் இது ஒது இமாலய சாதனையாகும். மேலும் தேசிய பட்டியலிலும் ஒரு ஆசனத்தை வென்று, மொத்தமாக இரு ஆசனக்களைக் கைப்பற்றி தம்மை மிகவும் வலுப்படுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் மற்றும் ஊர்காவற் தொகுதி (தீவகப் பகுதிகளில்) தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி பெரிதாக வாக்குகளைப் பெறவில்லை. அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்காக முன்னெடுக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெறும் 2,528 வாக்குகளையே பெற்றுள்ளார்கள். இதேவேளை ஊர்காவற்துறை தொகுதியில் 1,376 வாக்குகளையே பெற்றுள்ளார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 31,156 வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த மட்டில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஒரு நிலையான வாக்கு வங்கி உள்ளது. இருப்பினும் அக்கட்சியின் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமார் இம்முறை தனித்து சுயாதீனமாகப் போட்டியிட்டதால், வாக்கு வங்கியில் சரிவு வருமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை 45,797 வாக்குகளைப் பெற்றுள்ளனர. இது 2015 பெற்ற வாக்குகளை விட 51.4% அதிகமாகும்.

சந்திரிக்கா மற்றும் மகிந்த அரசில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தாவினால் அபிவிருத்தி என பெரிதாக எதையும் செய்ய முடியாது போயிருந்தாலும், பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்திருப்பதனால், அவரது வாக்கு வங்கியில் எப்போதும் வீழ்ச்சி வரப்போவதில்லை.

அங்கஜன் இராமநாதன்

இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் கை சின்னத்தில் (🖐🏻) நின்று யாழ் மாவட்டத்தின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருப்பினும், இவரை இப்போது வழி நடத்துவது மகிந்த அணியா (பொதுஜன பெரமுன) அல்லது சுதந்திரக் கட்சியா என தெரியவில்லை.உயர் அரச செல்வாக்கு மற்றும் பணபலம் இருப்பதனால் அங்கஜனால் பிரச்சாரங்கள் மிகத் திறமையாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தனித்து நின்று சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி 49,373 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ஏறக்குறைய 185% அதிகரிப்பு. ஒரு பழம்பெரும் தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வென்றது யாழில் மட்டுமே!! அதுவும் முற்றுமுழுதாக தமிழ் வாக்குகள் மூலம் கிடைத்த வெற்றி. இதற்கு பிரதியுபகாரமாக அங்கஜன் நல்லது செய்வாரென்று நம்புவோமாக.

இனிவரும் காலங்கள் பல சவால்கள் நிறைந்தவையாக அமையப் பெறும். கொரோனா தாக்கத்தினால் உலகமே தலை கீழாகப் போயுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகள் பாரிய பொருளாதார பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளன. இலங்கைக்கு கிடைக்கும் உதவிகளின் எண்ணிக்கையில் பல மடங்கு வீழ்ச்சி ஏற்படும். இதனால் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பில் தடங்கல்கள் ஏற்படும். ஆகவே தன்னிறைவான பொருளாதாரத்திற்கான வழிவகைகளைக் கண்டறிந்து யாழ் முதல் காலிவரை அதனை ஊக்குவித்து, மேம்படுத்தினால் மட்டுமே இலங்கை அபிவிருத்தியடையும். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் மிக மிக அவசியம்.

2 Comments

Comments are closed.