அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில்..

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சமப்வங்களுக்கு அரசியல் ஆதரவு பின்புலத்தில் இருப்பதாகவே தோன்றுகின்றது.

கொழும்பு பஸ்ரியன் மாவத்தையில் பிரதி காவல்துறை மா அதிபரின் பணிமனைக்கு அருகில், துணிகரமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் வழக்கு ஒன்றில் ஆஜரான பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒருவர் ஆவார்.

ஏற்கனவே புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல வீதித் தடைகள் போடப்பட்டுள்ளதுடன், கொழும்பு நகரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அரசியல் பக்கபலமின்றி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது சாத்தியமாகாது.

அளுத்கமவில் கொல்லப்பட்டவர் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு எதிரான பிரதான சாட்சி ஆவார். இந்த கொலையின் மூலம், கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை மீண்டும் அதே வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் ஒரு கீழ்த்தரமான காரியத்தை செய்து வரும் இலங்கை போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினரின் முகத்திரையை கிழிக்கும் ஒரு சந்தர்ப்பமும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

போதைபொருள் தொடர்பானவர்களில் ஆரம்பிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், சற்று விரிவடைந்து தனிப்பட்ட பழிவாங்கல்களாக உருவெடுக்கும் அபாயமும் உள்ளது. மே 9 இடம்பெற்ற வன்முறைகள் மூலம் ஏற்பட்ட அவமானங்கள், இழப்புகளை இலகுவில் மறக்க மாட்டார்கள் ராஜபக்ச சகோதரர்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும்போது பழி வேண்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறைவிடம் ஒன்றிலிருந்து, மகிந்த ராஜபக்ச தற்போது சுதந்திரமாக தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்.

அவருக்கு இராணுவம், காவல்துறை மற்றும் அரச மட்டங்களில் கணிசமானவர்கள் தமது ஆதரவை இன்னும் வழங்கி வருகின்றார்கள் (தனிப்பட்ட நன்றிக்கடனாக). அவர்களின் உதவியுடன் சிறு சிறு அசம்பாவிதங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு, அதனைக் காரணம் காட்டி மீண்டும் உருவெடுக்கும் ஒரு திட்டத்துடனும் மகிந்த செயற்படலாம்.

ரணில் பிரதமராக இருக்கின்றபடியால், மகிந்த எவ்வகையான குற்றச் செயல்களை மேற்கொள்வாராயினும், அது ரணிலின் தலையிலேயே விழும். உள்விவகாரங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு ரணில்தான் பதில் சொல்லவேண்டிவரும்.

எனவே மகிந்தவின் நகர்வுகளை ரணில் மென்போக்குடன் கையாளுவாராயின், இன்னும் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Latest articles

Similar articles