அரச சார்பு காடையர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கொழும்பில் காவல்துறையின் தலைமையகம் முன்பாக சோசலிச இளைஞர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ பகுதிகளில் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய அரச சார்பு காடையர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட பல காடையர்கள் காலி முகத்திடலிலும், அலரி மாளிகையின் முன்னாலும் தாக்குதலை நடத்தியிருந்தார்கள். அவ்விடத்தில் இலங்கை காவல்துறையின் பிரதான அதிகாரி ஒருவரும் நின்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான தகுந்த ஆதாரங்கள், தொலைக்காட்சிகளின் நேரலை ஒளிபரப்பில் தெளிவாகத் தெரிந்திருந்தும், இதுவரையில் முக்கிய குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மாறாக காடையர்களைத் தாக்கிய மற்றும் அரசாங்க உறுப்பினர்களின் சொத்துக்களை சேதமாக்கியவர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

மேற்படி நிலை தொடர்பாக எதிர்க்கட்சியினரோ, இலங்கை ஊடகங்களோ, சட்டத்தரணிகள் சங்கமோ உறுதியான நடவடிக்கைகள் எதையும் இதுவரையில் எடுக்காதது பலத்த ஏமாற்றத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

Similar articles