மக்களோ தெருவில், அரசியல்வாதிகளோ ஆராய்ச்சியில்

பாரிய பொருளாதார பின்னடைவால் இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மக்கள் நாளாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் ராஜபக்ச அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். இலங்கை மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள இலங்கை மக்கள் ராஜபக்ச சகோதரர்களின் அரசிற்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஆளும் கட்சி அரசியல்வாதிகளோ மக்களின் எதிர்ப்பை பெரிதாக பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மாறாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற மாதிரியே செயற்படுகிறார்கள். பெருபாலான இலங்கை மக்களோ புத்தாண்டு கொண்டாடும் மனநிலையில் இல்லை. பொருட்களின் அபரீத விலை அதிகரிப்பால் பல சாதாரண குடும்பங்களால் புத்தாண்டை கொண்டாடவே முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ்-சிங்களப் புத்தாண்டு பண்டிகைக்காக பாராளுமன்றத்திற்கு வரும் 19ம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், ரணில் விக்ரமசிங்க வரும் திங்கட்கிழமை (11/04) நாம் பாராளுமன்றைக் கூட்டி எல்லோருமாக ஆராய்ந்து, விரைவாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் அரச தரப்பு யாப்பினைக் காரணம் காட்டி 19ம் திகதியே பாராளுமன்றம் கூடும் என அறிவித்திருந்தது. மக்களுக்காக பாராளுமன்றமா? பாராளுமன்றத்திற்காக மக்களா? (போராடும் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்)

கடத்தப்படும் ஒவ்வொரு நாட்களும் ராஜபக்ச சகோதர்களுக்கு நன்மையாகவே முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்வதாகத் தெரியவில்லை. ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு ஆதரவு இல்லையென அரசாங்கத்தில் இருந்து பிரிந்து தனித்து இயங்கும் 41 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்குப் பதிலாக, ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்க தாம் ஆதரவு தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கான வேலைகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

‘பேசித் தீர்ப்போம்’ என்று சொன்னபடியே காலத்தை இழுக்கும் வேலைகளில் சுதந்திரக் கட்சி ஈடுபட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த சாந்த பண்டார அரசின் பக்கம் மீண்டும் தாவி, அமைச்சுப் பதவியையும் பெற்றுள்ளார்.

ராஜபக்ச சகோதர்கள் பதவியைத் தக்க வைக்க எந்த நிலைக்கும் இறங்குவார்கள் என்பதை எதிர்க்கட்சியினரும் நன்கறிவார்கள். அரசில் இருந்து விலகிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க கடுமையான முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளது. பதவியைக் கொடுத்தோ அல்லது பணத்தைக் கொடுத்தோ 41 பேரில் குறைந்தது 10 அல்லது 15 பேரையாவது விலைக்கு வேண்டுவார்கள் எனும் நிலைமை காணப்படுகிறது.

பாராளுமன்றில் அரசாங்கம் பலம் பெற்றால் உலக நாடுகள் வேறு எவரது கருத்தையையும் கேட்காது. எதிர்க் கட்சியினரும் மக்கள் முன் வந்து ‘தாம் சட்டரீதியாக, அரசியல் அமைப்பிற்கு ஏற்ற வகையில் எல்லாம் செய்தோம், ஆனால்…..’ என கை விரித்து விடுவார்கள்.

எனவே எதிர்க்கட்சியினர் சற்று வேகமாக புத்திசாலித்தனத்துடன் செயற்படாவிடின், இந்தியா மற்றும் சீனாவின் உதவியுடன்* மீண்டும் ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சி நடைபெறுவதை எவராலும் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.

* இந்தியாவும், சீனாவும் இலங்கைக்கு 4 தொடக்கம் 5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது !!!

Latest articles

Similar articles