அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வந்தடைந்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பொம்பியோ, இன்று (28/10) இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

சீனாவின் முழு ஆசீர்வாதம் பெற்ற மகிந்த குடும்பம் இலங்கையை ஆண்டு வரும் தற்போதைய நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வியஜம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும் பொம்பியோவின் இந்திய, இலங்கை விஜயம் சீனா மற்றும் தென்னிலங்கை சிங்கள கடும்போக்காளர்களை கடும் சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் வெளிப்படையாகவே தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் சீன உயர் மட்டத்தினரின் இலங்கை விஜயத்தின்போது அமைதியாக இருந்த ஜே.வி.பி, பொம்பியோவின் விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தென்னிலங்கை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஏற்கனவே பொம்பியோவின் விஜயம் தொடர்பான எதிர் மாறான செய்திகளையே மக்களிடம் பரப்பிவருகின்றன.

மெது மெதுவாக சீனாவின் காலணித்துவ நாடாக மாறி வருகின்ற இலங்கையில், ஏறக்குறைய 200,000 இற்கும் அதிகமான சீனப் பிரஜைகள் இருப்பதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.