தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் சட்டத்தரணி மணிவண்ணனைப் பாவித்து பிளவுகளை ஏற்படுத்த சில புலம்பெயர் சக்திகள் முயற்சிப்பதாக ஐயம் எழுகிறது.

மணிவண்ணனிற்கெதிராக முன்னணியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் அவர் புலம்பெயர் தேசத்திலிருந்து முன்னணிக்கு விரோதமானவர்களிடமிருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரப்பிரசாதங்கள் என இங்கே குறிப்பிடப்பட்டது தேர்தல் நிதியாக இருக்கலாம்!!! இருப்பினும் இது தொடர்பாக மணிவண்ணன் விரைவில் விளக்கம் (பொதுமக்களுக்கு) கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு வெளியே பல தீய சக்திகள் தமிழரின் அரசியல் அடித்தளத்தை சிதைக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றன. யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எழுச்சியை துல்லியமாகக் கணிப்பிட்டு, மணிவண்ணனைப் பலிக்கடா ஆக்கி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிளவுபட வைப்பதற்கான ஒரு முயற்சியோ எனவும் எண்ணத் தோன்றுகிறது!

அண்மையில் தனியார் தொலைக்காட்சி பேடியொன்றில் சிவாஜிலிங்கம் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். தன்னை புலம்பெயர் நாட்டிலிருந்து தொடர்புகொண்ட சிலர், முன்னணியுடன் இணைந்து போட்டியிருமாறும், அப்படிப் போட்டியிட்டால் தேர்தல் செலவிற்காக 50,000 பவுண்ட்ஸை (இலங்கை ரூபாயில் அண்ணளவாக 11,000,000.00) வழங்குவதாகவும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு பலர் புலம்பெயர் நாடுளில் இருந்து தாயகத்தில் தமிழரின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படியானவர்களை புலனாய்வாளர்கள் இயக்குவதற்கும் சாத்தியமுள்ளது.

மணிவண்ணன்

சட்டத்தரனி மணிவண்ணன் ஒரு சிறந்த கல்வியாளர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும், பேச்சாளராகவும் பதவி வகித்து வந்தார். மேலும் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு 22,741 வாக்குகளையும் பெற்றிருந்தார். இவர் பெற்ற வாக்குகளும் முன்னணியின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்துள்ளது. குறிப்பாக இவர் பெற்ற வாக்குகளும் தேசிய பட்டியல் ஆசனம் கிடைப்பதற்கு பெரிதும் உதவியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

‘தனிமரம் தோப்பாகாது’ என்பது போல மணிவண்ணன் தனித்து நின்று எதையும் செய்யமுடியாது. மக்களுக்கான தனது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்ள அவர் ஒரு அமைப்பில் அல்லது கட்சியில் இணைந்துதான் செயற்பட வேண்டும். எனவே விரும்பியோ, விரும்பாமலோ, அவ் அமைப்பின் அல்லது கட்சியின் விதிமுறைகளின்படிதான் செயற்பட வேண்டும்.

கட்சிக்குள் ஆயிரம் முரண்பாடான செயற்பாடுகள் இடம்பெறலாம். ஏனெனில் எல்லாமே “அரசியல்” கட்சிகள். அரசியல் கட்சிகள் எல்லாம் மக்களை வைத்துத்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மக்களுக்காக அரசியல் செய்யவில்லை.

இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த துரதிஷ்டவசமான நிலையில், மணிவண்ணன் மிகவும் தெளிவாகவும், தீர்க்கதரிசனத்துடனும் எதிர்கால அரசியல் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். நிச்சயமாக பலர் தனிக்கட்சி தொடங்கச் சொல்லி அறிவுரைகள் வழங்குவார்கள். தனிக்கட்சி தொடங்கி, தன் அடையாளத்தை தொலைக்காமல், அவரது கொள்கைகளுக்கு நெருக்கமான கொள்கைகளைக் கொண்டுள்ள கட்சியுடன் இணைந்து, தமிழ் மக்களுக்கு சேவை செய்யவதே மணிவண்ணனுக்குள்ள சிறப்பானதொரு தெரிவாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை வென்றதுடன், தேசிய பட்டியலிலும் ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. பல சவால்களின் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் பெறப்பட்ட மக்களின் பெரும் ஆதரவினை, மணிவண்ணனின் பதவி நீக்கம் தொடர்பான சர்ச்சைகளினால் இழப்பதற்கான வாய்ப்புள்ளது.

மேலும் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த சர்ச்சையைக் கையாண்டவிதம் திருப்தியளிக்கவில்லை. கட்சிக்குள்ளேயே பிரச்சனைகளைத் தீர்த்திருக்க வேண்டும். மேலும், செயலாளர் கஜேந்திரன் பற்றி யாழ் மக்கள் நன்கறிவர். தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின்னர், தேசிய பட்டியல் ஆசனத்தை கஜேந்திரனிற்கு வழங்கப்பட்டதையும் மக்கள் விமர்சிக்கத் தவறவில்லை. அது உட்கட்சி விவகாரமாக இருப்பினும், மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் உண்மைத் தன்மையுடனும், மனச்சாட்சியுடனும் செயற்பட்டிருக்க வேண்டும்.

சொல்லி வைத்ததுபோல் தமிழரசுக் கட்சிக்குள்ளும் பிளவு, முன்னணிக்குள்ளும் பிளவு. அனந்தி சசிதரன் தனிக்கட்சி, சிவாஜிலிங்கம் தனிக்கட்சி. ஐங்கரநேசன் ஒரு பக்கம், சந்திரகுமார் இன்னொரு பக்கம். இப்படியே ஒற்றுமையின்றி எல்லாத் திசைகளிலும் சிதறி, தமிழர்கள் தமது அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்களை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு இன்னொரு பிரபாகரன்தான் தேவை என்பதை தமிழ்க் கட்சிகளின் இந்த செயற்பாடுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.