இலங்கை அரசியலில் முக்கிய அரசியல்வாதியாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று (24/08) உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த மங்களவிற்கு நேற்று முன்தினமும், நேற்றும் அடுத்தடுத்து இடம்பெற்ற மாரடைப்பால் உயிர் பிரிந்தது.
இலங்கையில் இடம்பெற்ற/இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற தாந்தோன்றித்தனமான ஆட்சியினை துணிச்சலுடன் வெளிப்படையாகவே விமர்சித்து வந்தவர் மங்கள சமரவீர. மேலும் மாத்தறை மாவட்டத்தை மிகவும் முன்னேற்றகரமானதும், நவீனமயமானதுமான நகரமாக மாற்றியமைத்த பெருமை மங்களவிற்கே சேரும். 1983 இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்த மங்கள, 1989ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான மங்கள சமரவீர, கடந்த 38 வருடகால அரசியலில் இலங்கையின் பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தார். குறிப்பாக நிதி, வெளிவிவகாரம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
மங்களவின் மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் தமது அஞ்சலிகளைத் தெரிவித்து வருகின்றனர்.