குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய அணியான இலங்கை பொதுஜன முன்னணி (SLPP), நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிப்பது இலங்கை அரசியலில் புதிதாக ஒரு புயலை உருவாக்கியுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தலைவராகக் கொண்டு, கடும் போக்குடைய சிங்கள இனவாதிகளின் கூட்டுடன் களமிறங்கிய இலங்கை பொதுஜன முன்னணி, மொத்த வாக்குகளில் 45% வரையிலான வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
முன்னைய ஆட்சியில் சுரண்டப்பட்ட மக்கள் பணம், சீன அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு, விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்,தங்க நகைகள் என்பவற்றை முதலீடாகக்கொண்டு, எது செய்தாவது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற துடித்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச அணிக்கு இந்த தேர்தல் வெற்றி சிறப்பான ஒரு அடித்தளத்தை இட்டுள்ளது.
பெரும்பான்மையான சிங்கள மக்கள், முன்னைய ஆட்சியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய கடன் சுமை, பொருளாதார வீழ்ச்சி, ஊழல், கடத்தல், கொலை என எதனையும் சிந்திக்காமல், இனவாதிகளுக்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.
சிறை செல்ல நேரிடும் என்ற பயத்தில் இருந்தவர்களின் முகத்தில் இப்போது அகங்கார சிரிப்பு. முழுமையான தேர்தல் முடிவுகள் வர முன்னமே ‘அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச’, ‘அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச’, ‘பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்’ என பலவிதமான கோஷங்கள் எழ ஆரம்பித்துவிட்டன.
(நன்றி, படம் : Daily Mirror)
சேதாரம், செய்கூலி இல்லாமல் நரித்தனமான அரசியல் தந்திர நகர்வுகளால் காய் நகர்த்தும் ரணில் விக்ரமசிங்க, இந்த தேர்தலில் சுதந்திரக் கட்சியை சுக்கு நூறாக உடைத்துள்ளார். வடக்கு, கிழக்கில் தமிழ் வாக்குகளையும் சிறிய அளவில் சிதறடித்துள்ளார். ரணிலின் இந்த அரசியல் விளையாட்டு மஹிந்த உருவத்தில் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மீண்டும் பலமடைந்துள்ள இனவாத கூட்டணியின் மொட்டு மலர்ந்திடுமா, இல்லை ரணில் மொட்டினை பறித்திடுவாரா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.