யாழ் குடாநாடும், வாள் வெட்டுக்குழுக்களும்

யாழ் குடாநாட்டு இளைஞர்களை போதைவஸ்து, குடிப்பழக்கம், இவையிரண்டிற்கும் ஊடாக வாள்வெட்டு என தீயவழிகளில் வழிகாட்டி, சமூகத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்தி எதிர்காலத்தில் தாம் நினைத்தைச் செய்ய, மிகவும் சிறப்பாக தமது வேலைத்திட்டங்களை சிங்கள அரச இயந்திரம் முன்னெடுத்துச் செல்கின்றது.

யாழ் குடாநாட்டில் இரவுவேளைகளில் பரவலாக இடம்பெறும் வாள்வெட்டுக்கள், வீதியால் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தல், உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயற்பாடுகள் மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இங்கே அவதானிக்க வேண்டிய இரு முக்கிய வியங்கள் என்னவெனில், ஓன்று, வாள் வெட்டுக்களில் ஈடுபடும் குழுவினர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதில்லை. இரண்டாவது, வாள் வெட்டுக்களால் உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே இவர்களின் நோக்கம் பணமோ, பொருளோ இல்லை என்பது தெளிவாகிறது. (கொள்ளைச் சம்பவங்களில்/கவுத் தொழில் ஈடுபடுபவர்கள் உடமைகளுக்கு சேதம் விளைவிப்பதில்லை)

குறித்த ஒரு பகுதியில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுமாயின், அது அவ்வூர்க் காவாலிகளின் வேலை என்னும் முடிவிற்கு வரமுடியும். ஆனால் யாழ் குடாநாட்டில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என பரவலாக எல்லாப் பகுதிகளிலும் இது நடைபெறுகின்றது. இவ்வாறு இளைஞர்கள் ஓன்று சேர்ந்து, அதுவும் இரவு வேளைகளில் நான்கு, ஐந்து மோட்டார் சைக்கிள்களில் நீண்ட வாள்களுடன் துணிவாக சென்று மோசமான செயல்களில் ஈடுபட அவர்களுக்கு எவ்வாறு துணிவு வந்தது? யார் அந்த துணிவைக்கொடுத்தது?

நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு வழங்கிய உத்தரவுகளுக்கமைய, காவல்துறையினர் தாம் நடவடிக்கை எடுக்கிறோம், ரோந்து போகிறோம் எனக் கூறியும், வாள் வெட்டுக் குழுவின் அட்டகாசம் குறையவில்லை. ஆகவே சாதாரண பொது மக்களாக இருந்து யோசிக்கும்போது, காவல்துறையினரிலும் பார்க்க அதிகாரம் கூடிய ஒரு தரப்பினர் வாள் வெட்டுக் குழுவின் பின்னால் இருப்பது தெளிவாகப் புரிகின்றது.

அந்த அதிகாரம் கூடிய தரப்பினர் யார்? இராணுவப் புலனாய்வாளர்களா? அல்லது அரசியல்வாதிகளா? அல்லது இராணுவப் புலனாய்வாளர்களால் வழிநடத்தப்படும் அரசியல்வாதிகளா? சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். இந்த அதிகாரம் கூடிய தரப்பினரை கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கின்றதா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் பலர், எவ்வித பயமுமின்றி தாம் வாள்களுடன் நிற்கும் படங்களை முகநூலில் (Facebook) போட்டு வீர வசனம் (தூஷண வார்த்தைகளுடன்) கதைக்கின்றனர். இவற்றையெல்லாம் காவல்துறை கண்டுகொண்டதா எனத்தெரியவில்லை !

அண்மையில் காவல்துறையினர் வாள் வெட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என பலரைக் கைது செய்திருந்தனர். இவர்களெல்லாம் யார்? எந்த குழுவைச் சேர்த்தவர்கள்? இவர்கள்தான் முக்கிய சூத்திரதாரிகளா? என்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில்கள் எதுவும் இல்லை.

இந்த கைது நடவடிக்கைளின்போது, காவல்துறையினர் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் காணப்பட்ட வாள்கள் துருப்பிடித்தவையாக இருந்தன. மேலும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் முன்னாள் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இதிலிருந்து எப்படியான நாடகங்கள் பின்புலத்தில் போய்க்கொண்டிருக்கின்றது எனத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

துரதிஷ்டவசமாக ஊடகங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறும்போது முதலில் செய்திகள் வரும். பின்னர் காவல்துறையினர் வெளியிடும் அறிக்கை/கள், புகைப்படங்கள் தொடர்பான செய்திகள் வரும். இப்படியே செய்திகள் மட்டும் மாறி மாறி வருமேயொழிய, வாள்வெட்டுகளை கட்டுப்படுத்த எந்தவொரு ஒழுங்கான முடிவும் வராது என்பதே தற்போதைய நிஜமாகவுள்ளது.

 

jaffna sword attacks

Latest articles

Similar articles