யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி

வரும் உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் பெரும் இழுபறிநிலை காணப்படுகிறது. இப்படியான ஒரு நிலை, தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் உருவாகியிருக்கும் பிளவையே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

கட்சியில் இணைந்து குறுகிய காலத்தினுள், தமிழரசுக் கட்சியினுள் செல்வாக்கு மிக்கவராகவும் , சம்பந்தனின் செல்லப் பிள்ளையாகவும் விளங்கும் சுமந்திரனின் முதன்மை வேட்பாளர் தெரிவு இ.ஆனோல்ட். இந்த தெரிவு கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன்னமே முடிவான ஒரு விடயமாகும். இருப்பினும் நேற்று (18/12) சுமந்திரன் இதனை வெளிப்படையாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

வடமாகாணசபை உறுப்பினராக இருந்த இ.ஆனோல்ட், சுமந்திரனின் அறிவுரைக்கமைய, சட்டரீதியாக தனது பதவி விலகலுக்கான கடிதத்தை அவைத் தலைவரிடம் கடந்த 14ம் திகதியே கையளித்துவிட்டார். பதவி விலகலை அவைத் தலைவர் சிவஞானமும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அறிவித்தல்களால் உசாரடைந்த மாவை சேனாதிராஜா “யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை” என தெரிவித்தார். ஏனெனில் மாவை சேனாதிராஜாவின் தெரிவாகிய ஜெயசேகரத்தை கட்சி பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை.

சாவகச்சேரி நகரசபை வேட்பாளர்கள் தெரிவிலும் சுமந்திரனின் கையே ஓங்கி இருந்தது. அதாவது சுமந்திரனின் ஆதரவு பெற்ற வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் தயாரித்த வேட்பாளர் பட்டியலே இறுதி செய்யப்பட்டது. இவ்விடத்தில் தமிழரசுக் கட்சியின் அருந்தவபாலனின் நிலையோ பெரும் பரிதாபம்.

இதிலிருந்து தெளிவாக புலப்படும் விடயம் யாதெனில், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் இவர்களுக்கிடையிலான அதிகார போட்டியும், ஒற்றுமையின்மையுமே. அதுமட்டுமின்றி “தமிழ் தேசிய கூட்டமைப்பு” என்று கூறிக்கொண்டு, தமிழரசுக் கட்சி தன்னை மட்டும் பலப்படுத்திக்கொள்கின்றது. இந்த நிமையினால் டெலோ, புளொட் போன்ற கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன. அத்துடன், டெலோ, புளொட் கட்சிகள் வரும்உ ள்ளூராட்சி தேர்தலில் முழு அளவிலான ஈடுபாட்டைக் காட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படி நடக்குமென்று தெரிந்துதான் ஈ.பி.ஆர்.எல்.(f)எப் – சுரேஷ் அணி முதலே பிரிந்து சென்றார்களோ தெரியவில்லை !

தமிழரசுக் கட்சி, பங்காளிக் கட்சிகளை ஓரம் கட்ட இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை டெலோ, புளொட் கட்சிகள் விரும்பவில்லை. ஈ.பி.ஆர்.எல்.(f)எப் – சுரேஷ் அணி அதை முற்றாக எதிர்த்திருந்தது.

எனவே, நடக்கும் நிகழ்வுகள் யாவும் சுமந்திரனின் நெறியாள்கையில் நடக்கின்றது என்பது தெளிவாகப் புரிகின்றது. அதாவது சம்பந்தன் ஐயா, சுமந்திரனின் தெரிவான ஆனோல்ட்டை யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக நியமிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது.

 

Latest articles

Similar articles