தமிழரசுக் கட்சியின் பாரிய வீழ்ச்சியும், குரூர முகமும் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரின் ஏக பிரதிநிதிகள் என கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ITAK TNA sumanthiran Jaffna
2015 மற்றும் 2020 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் ஒப்பீடு

தமிழரசுக் கட்சியை அடித்தளமாகக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சியானது, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மாற்று அணியை அல்லது தலமைத்துவத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்குரிய ஒரு சமிக்ஞை ஆகும்.

இதேவேளை கூட்டமைப்பின் வீழ்ச்சியானது சிங்கள பேரினவாத அரசிற்கு பாரிய உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு விடயமாகும்.

ITAK TNA sumanthiran Jaffna
2015 மற்றும் 2020 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் ஒப்பீடு – யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவிலேயே வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்றே கருதவேண்டியுள்ளது. இலங்கையிலேயே விசேட அதிரடிப் படையுடன் வலம் வரும் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் தீர்க்கதரிசனமற்ற சில செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதல பாதாளத்தில் வீழ்த்தியுள்ளது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

தமிழ் மக்களுக்கு அறிமுகமில்லாத அம்பிகா சற்குணநாதன் போன்றோரை வேட்பாளராக்க சுமந்திரன் முயன்றதும், பின்னர் கட்சியின் மற்றைய உறுப்பினர்களின் பெரும் அழுத்தத்தினால் அது கைவிடப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இறுதி நேரத்தில் வாக்குகள் அதிகம் பெறுவதற்காக, யாழ் மாநகர சபை முதல்வரான ஆர்னோல்ட்டை தேர்தலில் இறக்கி, அவரின் மக்கள் செல்வாக்கையும் வீணடித்துள்ளார் சுமந்திரன்.

மேலும் கட்சி வேட்பாளர்களே ஒற்றுமையின்றி செயற்பட்டுள்ளார்கள். தமது சக வேட்பாளர்களையே பிரச்சார மேடைகளில் தாழ்த்திப் பேசி கட்சியின் வீழ்ச்சியை மேலும் இலகுவாக்கி உள்ளார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் தனது தினசரிப் பத்திரிகையில், சுமந்திரனுக்கு எதிராக பல அவதூறுகளைப் பரப்பியுள்ளார் என சுமந்திரனே வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

விருப்பு வாக்கு மோசடி

தேர்தலின் முன்பே சிறிதரன், மற்றும் சுமந்திரன் போன்றோருக்கெதிராக பல எதிர்மறையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருந்தன. இருப்பினும் சிறிதரன் 35,884 விருப்பு வாக்குகள் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே முதலாவதாக வந்துள்ளார்.

இவரின் உதவியுடனேயே, ஐந்தாம் இடத்திலிருந்த சுமந்திரன் கிளிநொச்சி மாவட்ட வாக்குகளைப் பாவித்து இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே எண்ணி முடிக்கப்பட்ட கிளிநொச்சி வாக்குகளின் விபரங்கள், யாழ் தேர்தல் மத்திய நிலையத்திற்கு இறுதி நேரத்திலேயே அனுப்பி வைக்கப்படதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே பல சந்தேகமானதும் மற்றும் நம்பகத்தன்மையற்ற சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சித்தார்த்தன் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து தெரிவித்த கருத்து

உள்ளூர் அரச மட்டத்தில் விருப்பு வாக்குகளில் மாற்றம் செய்வதென்பது சற்று கடினமானதொன்றாகும். இருப்பினும் மிக உயர் மட்டத்தில் இருந்து அழுத்தங்கள் வரும்போது செய்ய முடியாததென்று எதுவுமில்லை.

சுமந்திரனின் எதிர்கால திட்டங்கள்

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தமட்டில் சுமந்திரன் சட்ட அறிவு மற்றும் மொழி அறிவு அதிமமுள்ளவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. இருப்பினும் அது மக்களிற்கும், கட்சிக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

தேர்தல் முடிந்த பின்னர் சுமந்திரனால் மட்டும் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் தலவைர் மற்றும் செயலாளர் தோல்வி அடைந்த விதத்தை அவர் சுட்டிக்காட்டிய விதம் சற்று முகம் சுழிக்க வைத்தது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதுவும் ஒரு சில வாக்குகளால் அல்ல, தீர்மானமாக தோல்வியடைந்துள்ளனர். அது தொடர்பாகவும் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சுமந்திரன் குறிப்பிட்டிருந்த விதம் அவரின் பார்வை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியைக் குறி வைப்பதைப் போல இருந்தது.

ஆர்னோல்ட்டைப் போலவே இறுதி நேரத்தில் வேட்பாளராக்கப்பட்ட திருமதி ரவிராஜ் அவர்கள், தேர்தலின் பின் கழட்டிவிடப்பட்டுள்ளார். திருமதி ரவிராஜ் அதிகளவில் வாக்குகளைப் பெறுவார் என எவரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் அவரின் வெற்றியை அயல் நாடும், சிங்கள பேரினவாத அரசும் ஒருபோதும் விரும்பாது.

ஏனெனில் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிராஜை சுட்டுக் கொன்றது யார் என்பதை உலகறியும். இருப்பினும் அது தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. மூல காரணமானவர்களைக் கைது செய்யாமல், கைக்கூலிகளை கைது செய்து, ரணில் அரசாங்கம் எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேந்து அரசியல் பயணம் மேற்கொண்டது.

இப்படியான நிகழ்வுகள் மற்றம் குரூர எண்ணங்கள் ஒருபோதும் உண்மையான அரசியல் செய்ய இடமளிக்கப்போவதில்லை.

இப்படியான சந்தர்ப்பத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தமிழர்களுக்கான ஒரு சிறப்பான, உண்மையான அரசியல் பாதையை அவ்விரு கட்சிகளும் இட்டுச் செல்லவேண்டும்.

Latest articles

Similar articles