இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு முன்மொழிவு

நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தணிப்பதற்காகவும், மக்களின் நாளாந்த வாழ்க்கையை மறுபடி சீராக்கவும், மக்கள் தமக்கு விரும்பிய அரசை தெரிவு செய்யும் நிலையை உருவாக்குவதற்காகவும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை, அரசாங்கத்தில் இருந்து பிரிந்து தனித்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளனர்.

சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பத்து சுயேட்சை கட்சிகளின் சார்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா, பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து தனித்துச் செயற்படும் விஜயதாச ராஜபக்ச மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கையொப்பமிட்டு முன்மொழிவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்,

  • பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கியதாக தேசிய நிறைவேற்று செயற்குழு ஒன்றை உருவாக்குதல்
  • குறைந்தளவிலான அமைச்சர்களை உள்ளடக்கியதான இடைக்கால அரசை அமைத்தல்
  • அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை, சில மாற்றங்களுடன் மீள் அமுல்படுத்தல்
  • தேசிய நிறைவேற்று செயற்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிப்பார்
  • தேசிய நிறைவேற்று செயற்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, குறைந்த அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்
  • தேசிய நிறைவேற்று செயற்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, குறைந்தளவு அமைச்சரவை செயலாளர்களை ஜனாதிபதி நியமிப்பார்
  • அமைச்சர்கள் சம்பளம் பெறாமல் செயற்பட வேண்டும்
  • அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மின்சாரம், எரிபொருள், எரிவாயு, உர வகைகள், விவசாய மற்றும் தொழிற்துறை உற்பதிப் பொருட்கள் போன்றவற்றின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்தல்
  • கல்வி, சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளுக்கு வரும் ஆறு மாதங்களுக்குள் தேசிய கொள்கை ஒன்றை உருவாக்குதல்
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles