காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ பகுதியில் உள்நுழைந்த ‘ராஜபக்ச‘ அணியின் காடையர் கூட்டம் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டுள்ளன. இதுவரையில் 178பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து ராஜபக்ச அணியின் முக்கிய அரசியல் புள்ளி ஒருவரே கலவரத்தை வழிநடத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். காடைத்தனத்தில் ஈடுபட்ட அனைவரினதும் அடையாளமும் உள்ளூர் ஊடகங்களின் நேரடி ஒளிபரப்பில் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.
அமைதி முறையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிடின் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவருமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காவல்துறை மா அதிபருக்குத் தெரிவித்துள்ளது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு மக்கள் விடுதலை முன்ணனியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கா அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வருகை தந்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமநாயக்கா ஆகியோரும் வருகை தந்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்களால் இவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.