தேசிய அரசாங்கம் தொடரும்

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் ஓரளவு முடிவிற்கு வந்துள்ளது.

தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன தாம் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை அரசியலமைப்பின் பிரகாரம் கொண்டு செல்வோம் என இன்று பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில், “இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அரசியலமைப்பின் பிரகாரம் தொடர்ந்து கொண்டு செல்வோம். இது தொடர்பாக நானே பாராளுமன்றத்தில் யோசனையொன்றை முன்வைத்தேன். ஆகவே எமது பயணத்தை இரத்து செய்யவில்லை” என தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர உரையாற்றுகையில், “தேசிய அரசாங்கம் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு அமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதுடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியினை முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளோம்” என தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜெயசூரியா

மேற்படி இரு பிரதான கட்சிகளின் முடிவுகளின் பின்னர் கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜெயசூரியா “தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியும் தொடர்ந்து பயணிப்பதாக இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அப்பால் எனக்கு எதுவும் செய்ய முடியாது. எனினும் இது தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து தான் அவதானம் செலுத்துவேன்” என தெரிவித்தார்.

Latest articles

Similar articles