வடபகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தியாவின் ஆதிக்கம்

​நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில், வட மாகாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை ஒற்றுமையின்றி மிகவும் குழப்பகரமாகவும், இழுபறி நிலையிலும் உள்ளது.

ஒழுங்கான தலைமைத்துவம் இல்லாதது ஒரு பிரதான காரணமாக இருந்தாலும், வெளியுலக, குறிப்பாக இந்தியாவின் அழுத்தங்கள் அல்லது தலையீடுகள் வடபகுதி அரசியலில் பெரும் பங்கு வகிக்கின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களின் அறிவுறுத்தல்கள்/வழிநடத்தலில் ஒற்றுமையாக விரும்பியோ, விரும்பாமலோ செயற்பட்ட தமிழ் கட்சிகள் (முன்னால் ஆயுதக் குழுக்கள் உட்பட), இன்று திக்குத்திக்காகப் பிரிந்து, மேய்ப்பான் இல்லாத மந்தைகள் போல செயற்படுகிறார்கள். இதில் இந்தியாவின் பங்கு அளப்பரியது.

2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், வட-கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளே நாட்டின் விதியைத் தீர்மானித்தது. சர்வாதிகார ஆட்சியை மாற்றி இலங்கைக்கு ஒளி கொடுத்த புண்ணியம் வட-கிழக்கு தமிழ் மக்களுக்கே சேரும். இப்படியான ஒரு நிலை, அதாவது தமிழரின் வாக்குப்பலம் முழு நாட்டிற்குமான விதியைத் தீர்மானிப்பதென்பது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி, இந்திய கொள்கைவகுப்பாளர்களுக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடையமாகவே இருந்தது. இன்னும் இருக்கிறது.

இந்திய துணைத்தூதரகம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட நாள் முதல் வடபகுதி தமிழரின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பலவிதமான நடவடிக்கைகள் மிகவும் நுட்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை தென்னிலங்கை கண்டும் காணாமலும் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கும் இது ஆதாயம் தரக்கூடிய ஒரு விடயம்தானே.

இப்போது உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், வித்தியாதரன் மற்றும் சில முன்னாள் போராளிக் குழுக்கள் ஊடாக, தான் நினைத்ததைச் செய்ய இந்தியா முற்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் பேரவையுடன் சேர்ந்து போட்டியிட ஆயத்தமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (EPRLF அணி), இந்தியா சென்று வந்த பின்னர் தனது முடிவை மாற்றி, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். இக்கால கட்டத்தில்தான் ரணில் விக்கிரமசிங்காவும் இந்தியா சென்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெலோ (TELO) அமைப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தனியாகவோ அல்லது வேறு கட்சிகளுடன் சேர்ந்தோ போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. செல்வம் அடைக்கலநாதன் சுமந்திரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்திய போதும், சுமூகமான முடிவுகள் எதுவும் இக்கட்டுரை எழுதும் வரையில் எட்டப்படவில்லை.

இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சுமந்திரன், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்(f). அணிகளை ‘முன்னாள் ஆயுதம் தாங்கிய கட்சிகள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஒற்றுமைதான் அவசியம் என அவர் நினைத்திருந்தால், அப்படியொரு சொற்பதத்தைப் பயன்படுத்தியிருக்கமாட்டார். சுமந்திரனை இவ்வாறு கதைக்க யார் தூண்டுகிறார்கள் என்று இப்பவேனும் விளங்குகிறதா மக்களே?

உதய சூரியன் + தமிழர் விடுதலைக் கூட்டணி

மிக நீண்ட காலமாக உறங்கு நிலையிலிருந்த உதய சூரியன் கட்சி, அதாவது தமிழர் தேசத்தின் ஆரம்பகாலக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது.

இதுவரை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவகையில் ஈ.பி.ஆர்.எல்.எப்(f) – சுரேஷ் பிரேமச்சந்திரன் அணி, ஈரோஸ் மற்றும் ஜனநாயக தமிழரசுக் கட்சி என்பவற்றுடன் முன்னாள் போராளிகளின் ஒரு அணி என்பன தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. அத்துடன் டெலோ மற்றும் புளொட் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இங்கே கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடையம் என்னவெனில், ‘உதய சூரியன்’ சின்னம் தமிழ் மக்களிடையே சற்று பிரபலமான ஒரு சின்னமாகும். இதைப் பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சில கட்சிகளைப் பிரித்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதன் மூலம் வடபகுதி மக்களை பிளவுபடுத்தி, வாக்கு வங்கியினை நலிவடையச் செய்து, தமிழரைப் பலவீனப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

இதற்கு மேலும் வலுச்சேர்க்கும்வகையில், மிக முக்கிய உள்ளூராட்சி சபையான யாழ் மாநகர சபையின் பிரதான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தமிழரசு கட்சியிடையே இழுபறி தொடங்கிவிட்டது. மாவை சேனாதிராஜாவின் தெரிவாக ஜெயசேகரம் உள்ளபோது, சுமந்திரனின் தெரிவாக வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் உள்ளார். இவர்களிற்கு அப்பாற்பட்டு வித்தியாதரனை பிரதான வேட்பாளராக நியமிக்குமாறு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக அறிய முடிகிறது !!

Latest articles

Similar articles