இலங்கையில் சீனிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல இடங்களிலும் சீனியின் விலையை தாம் நினைத்தவாறு அதிக விலையில் விற்று வருகிறார்கள் வியாபாரிகள்.
செப்டெம்பெர் 1 முதல் சிவப்பு சீனியை சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையில் பெறலாம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ சிவப்பு சீனி ரூபாய் 130 இற்கு விற்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மனிதாபிமானமற்றமுறையில் அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை ஒப்புகொண்ட இராஜாங்க அமைச்சர், டொலரின் பெறுமதி அதிகரிப்பை காரணம் கூற முடியாதென தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. சீதுவை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 மெற்றிக்தொன் சீனியை நுகர்வோர் அதிகாரசபை கைப்பற்றியுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 12,000 மெற்றிக்தொன் சீனியை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டுவர அனுமதி இழுத்தடிக்கப்பட்டதால்தான் இலங்கையில் சீனித் தட்டுப்பாடு நிலவுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பரவலின் பின்னர் கடந்த வருடம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொருட்கள் விநியோகத்தை சீராக நடைமுறைப்படுத்திய அரசு, இவ்வருடம் ஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, டொலரின் பெறுமதி அதிகரிப்பு போன்றவற்றால்தான் இலஙகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.