கைதிகளால் நிரம்பி வழியும் இலங்கை சிறைச்சாலைகள்

இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளும் அளவிற்கதிகமான கைதிகளால் நிரம்பியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக சிறைவைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 13,200 ஆகும். இருப்பினும் அனைத்து சிறைகளிலும் இருமடங்கிற்கும் அதிகமான கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 25ம் திகதிவரைக்குமான கணிப்பின்படி, நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் 26,000 இற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். பெரும்பாலான கைதிகள் போதைபொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் 62 வீதமான கைதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் அரசியல் கைதிகளாக, 10 தொடக்கம் 20 இற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள் என்பதும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியுள்ளது.

Latest articles

Similar articles