இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பம்

இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பமாகியுள்ளதை நேற்றை தினம் (18/12) இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைது உறுதிப்படுத்தியுள்ளது.

2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாக ஒருவரை இரவில் சென்று கைது செய்ய வேண்டிய அவசியயம் இல்லை. அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய எந்த ஒரு விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

நல்லாட்சி அரசில், தற்போதைய ஜனாதிபதி உட்பட பலர் அடிக்கடி விசாரணைக்கென அழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டிருந்தார்கள். இருப்பினும் ஒரு சில சாதாரண நபர்களைத் தவிர எந்த ஒரு முக்கிய புள்ளியையும் ரணில்-மைத்திரி அரசு கைது செய்திருக்கவில்லை.

பல வெளிப்படையான, போதியளவு சான்றுகள் இருந்தும், நல்லாட்சி அரசாங்கத்தினால் மகிந்த அரசில் (2005 – 2015) இடம்பெற்ற  எந்தவொரு குற்றச் செயல்களிற்கும் தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக குற்றவாளிகள் காப்பாற்றபட்டத்துடன், ஒரு படி மேலே போய் தூக்கு தண்டனை கைதியை விடுவித்தார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா.

மகிந்த அரசிற்கெதிராக நடவடிக்கை எடுக்க ரணில் தயங்கினாரா அல்லது மைத்திரி தடையாக இருந்தாரா என்பது தெளிவில்லாமல் உள்ளது. 2008ல் ஐக்கிய தேசிய கட்சியின் வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஒய்வு பெற்ற முப்படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டது இன்னும் மர்மமாகவே உள்ளது. அப்போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ரணில் சர்வதேச விசாரணையை கோரியிருந்தார். இதன் முலம் விடுதலைப்புலிகள் அந்த படுகொலையை செய்யவில்லை என்பது தெளிவாகியிருந்தது. இருப்பினும் ரணில் ஆட்சிக்கு வந்த பின்னர் கூட, இந்த படுகொலை சம்பந்தமாக எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிக்கவைத் தவிர மற்றைய பல உறுப்பினர்கள் / பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் காலத்தில் பல அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க, முஜிபுர் ரஹ்மான், சரத் பொன்சேகா போன்றோர் துணிச்சலாக பல உண்மைகளை பொது மேடைகளில் பேசியவர்கள். துரதிஷ்டவசமாக இவர்களுக்கு ரணிலின் பூரண ஆதரவு ஒருபோதும் இருந்ததில்லை. நாளை இவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலை வந்தால், நிச்சயமாக ரணில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்பது திண்ணம்.

மகிந்த அரசில் இடம்பெற்றதுபோன்று நேரடியான வெள்ளை வான் கடத்தல்கள் அல்லது சர்வாதிகாரப்போக்கில் மிரட்டல்கள் என பழைய முறையில் எந்தவொரு பழிவாங்கல்களும் இடம்பெறப்போவதில்லை. மாறாக ஏதோ ஒருவகையில், தனிப்பட்ட பழைய சம்பவங்களுடன் முடிச்சுப்போட்டு அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறும்.
அவ்வாறான முதல் கைதாக சம்பிக்க ரணவக்கவின் கைது இடம்பெற்றுள்ளது.

கடும் சிங்களப்போக்காளரான, பௌத்த வெறியரான சம்பிக்கவிற்கே இந்த நிலமையெனில், மற்றவர்கள் நிலை……🧐

Latest articles

Similar articles