நஸீர் அஹமட் கட்சியில் இருந்து நீக்கம் – ஹக்கீம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு அண்மையில் கோத்தபாய அரசாங்கத்தினால் அமைச்சுப் பதவி ஒன்றும் வழங்கப்பட்டது.

கட்சி உயர் மட்டம் நேற்று(22/04) கூடி ஆராய்ந்து இந்த முடிவை எடுத்ததாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலையும் காணப்படுகிறது.

ஏற்கனவே அரசிற்கு ஆதரவளித்த சில முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தன்நிலை விளக்கக் கடிதங்கள் கிடைக்கப்பெற்று, அவை கட்சியின் உயர் மட்டத்தினால் ஆராயப்பட்டதாகவும், அது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று இறுதி முடிவு எடுக்கும் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் நஸீர் அஹமட் அளித்த தன்நிலை விளக்கம் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்ததாகவும், அதனால் அவர் உடனடியாகவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நேற்றைய பாராளுமன்ற அமர்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், கட்சி மாறி அரசிற்கு ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என கேட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles